ஐயப்பனின் அறுபடை வீடுகள்

சபரிமலையில் வீற்றிருக்கும் ஐயப்பனுக்கும் கூட அறுபடை வீடுகள் உள்ளன.

அறுபடை வீடு என்றாலே, நமக்கு முருகப்பெருமான் தான் நினைவுக்கு வருவார். ஆனால் சபரிமலையில் வீற்றிருக்கும் ஐயப்பனுக்கும் கூட அறுபடை வீடுகள் உள்ளன. அவை: ஆரியங்காவு, அச்சன்கோவில், குளத்துப்புழா, எருமேலி, பந்தளம், சபரிமலை.
ஆரியங்காவு :
கேரள மாநிலத்திற்கும், தமிழகத்திற்குமான எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது ஆரியங்காவு. திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது இந்த ஊர். இங்குள்ள ஆலயத்தில் அரசராக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார் ஐயப்பன். இவருடன் புஷ்கலை தேவி இருப்பது விசேஷம். இவரை சாஸ்தாவான ஐயப்பன் திருமணம் செய்யும் காட்சியை ஒவ்வொரு டிசம்பர் மாதமும் நடத்துவார்கள். மதம் கொண்ட யானையை அடக்கிய அதன் மேல் அமர்ந்த கோலத்தில் இங்கு இறைவன் காட்சி தருகிறார். இதனால் அவருக்கு ‘மதகஜ வாகன ரூபன்’ என்ற பெயரும் உண்டு.
அச்சன்கோவில் :
கேரள மாநிலத்தின் அடர்ந்த வனப்பகுதியில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. செங்கோட்டையில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரம். ஐயப்பன் வீற்றிருக்கும் அனைத்து ஆலயங்களிலும் விக்கிரகம் மாற்றம் கண்டுள்ளது. ஆனால் பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்ட இந்த ஆலயத்தில் மட்டும், விக்கிரகம் பழமை மாறாமல் காட்சியளிக்கிறது. கையில் அமுதமும், காந்தமலை வாளும் ஏந்திய திருக்கோலத்தில் இத்தலத்தில் ஐயப்பன் வீற்றிருக்கிறார். இவருக்கு இருபுறமும் பூரண, புஷ்கலை தேவியர் காட்சி தருகின்றனர். இவரை ‘கல்யாண சாஸ்தா’ என்றும் அழைக்கிறார்கள். திருமண வரம் வேண்டுவோர் வழிபட வேண்டிய சிறப்புமிக்க தலம் இதுவாகும்.
குளத்துப்புழா :
கேரளாவில் குளத்துப்புழா என்ற இடத்திலும் ஐயப்பன் அருளாட்சி செய்கிறார். இங்கு அவர் குழந்தை வடிவில் காட்சி தருகிறார். இதனால் அவரை ‘பால சாஸ்தா’ என்று அழைக்கின்றனர். இந்த ஆலயத்தின் கருவறை சிறுவர்கள் நுழையும் அளவிலான உயரத்திலேயே அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கு விஜயதசமி தினத்தன்று ‘வித்யாரம்பம்’ என்னும் நிகழ்ச்சி விமரிசையாக நடக்கிறது. அன்று பள்ளியில் சேரவிருக்கும் குழந்தைகளுக்கு எழுத்துப் பயிற்சி தரப்படும். குழந்தை வரம் வேண்டுவோரும் வழிபட ஏற்ற தலம் இது.
எருமேலி :
எருமைத் தலையைக் கொண்ட மகிஷியை, ஐயப்பன் வதம் செய்த தலம் இது என்று கூறுகிறார்கள். இதனால் எருமைக்கொல்லி என அழைக்கப்பட்ட இந்த இடம், நாளடைவில் மருவி ‘எருமேலி’ என்றானது. மகிஷியை வதம் செய்த மணிகண்டன், அவளது உடல் மீது நர்த்தனம் செய்ததன் நினைவாகவே, பக்தர்கள் இன்றளவும் எருமேலியில் இருந்து நடனம் ஆடியபடியே சபரிமலைக்கு பயணம் மேற்கொள்கிறார்கள். இந்த நடனத்திற்கு ‘பேட்டைத் துள்ளல்’ என்று பெயர். இந்த ஆலயத்திற்கு அருகில் வாபரின் பள்ளிவாசல் இருக்கிறது. இங்கு விபூதி பிரசாதமாக வழங்கப்படுகிறது.
பந்தளம் :
பந்தளம் என்பது ஐயப்பன் வாழ்ந்ததாக கருதப்படும் அரண்மனை இருக்கும் இடமாகும். இங்கு பந்தள மன்னன் ராஜசேகரனால் கட்டப்பட்ட ஆலயம் இருக்கிறது. இந்தக் கோவில் அச்சன்கோவில் நதியின் கரையோரத்தில் அமைந்துள்ளது. சபரிமலை ஐயப்பனுக்கு மகரவிளக்கு பூஜையின் போது அணிவிக்கப்படும், திரு ஆபரணங்கள் அனைத்தும் இங்குதான் வைக்கப்பட்டிருக்கின்றன. செங்கனூர் ரெயில் நிலையத்தின் அருகில் இந்த திருத்தலம் அமைந்திருக்கிறது.
சபரிமலை :
கேரளாவில் உள்ள இங்குதான் தர்மசாஸ்தா என்று அழைக்கப்படும் ஐயப்பன், தன்னை நாடிவரும் பக்தர்கள் யோக சின் முத்திரையுடன், குத்துகாலிட்டு அமர்ந்தபடி அருள்புரிந்து வருகிறார். பதினெட்டு படிகளை ஏறியவுடன் பக்தர்களை வரவேற்பது கொடி மரம். ஐயப்பனின் சன்னிதி வாசலில் ‘தத்வமஸி’ என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது. இந்த வார்த்தைக்கு ‘நீ எதை நாடி வந்தாயோ, அது நீயாகவே உள்ளாய்’ என்பது பொருள். உனக்குள்ளேயே இறைவன் இருக்கிறான். 41 நாட்கள் இருக்கும் விரதத்தை நாளும் நீ மேற்கொண்டால், நீயும் கடவுளே என்பதுதான் இதன் உண்மையான அர்த்தம்.
http://tmpooja.com/shop/idols-handicrafts-hand-craft-handcraft/seetha-ramar-tanjore-painting/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *