கல்கி அவதாரம் எப்பொழுது எங்கு எதற்காக நிகழும் ?

‘கல்கி அவதாரம்’ குறித்து தவறான கருத்துகள் பலவும் நிலவி வருகிறது. புராணங்களின் துணை கொண்டு அவதார உண்மைகளை உணர்ந்து தெளிவு பெறுவோம்.

கலியுக முடிவிலேயே ‘கல்கி அவதாரம்’ நிகழும் என்று புராணங்கள் அறுதியிட்டுக் கூறுகின்றன. கலியுகம் 4,32,000 ஆண்டுகளைக் கொண்டது. தற்பொழுது 5,105 ஆண்டுகளே முடிவடைந்து உள்ளது. யுகம் நிறைவு பெற சுமார் 4,27,000 ஆண்டுகள் மீதமுள்ளது.

‘சம்பளம்’ என்னும் கிராமத்தில் ‘விஷ்ணு யசஸூ’ என்ற வேதியருடைய இல்லத்தில் பாற்கடல் வாசனான பரந்தாமன் கோடி சூர்ய பிரகாசமாய் கல்கி அவதாரம் எடுத்து அருளுவார் (ஆதாரம்: ஸ்ரீவிஷ்ணு புராணம்).

ஸ்ரீகல்கி, தர்மத்துக்கு விரோதமாக செயல்படும் அனைவரையும் சம்ஹரித்து, உலகம் முழுவதும் வேத தர்மத்தை நிலை பெறச் செய்தருளுவார். தர்மத்தை நிலை நிறுத்துவதே இறை அவதாரங்களின் நோக்கமே அன்றி, புவியை அழிப்பது அல்ல.

பிரளயம் கல்பத்தின் முடிவில் மட்டுமே நிகழும். ஒரு கல்பம் 14 மன்வந்திரங்களைக் கொண்டது. ஒரு மன்வந்திரம் 71 சதுர்யுகங்களைக் கொண்டது. நான்கு யுகங்களைக் கொண்டது ஒரு சதுர்யுகம் (கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலி யுகம்).

தற்பொழுது நடைபெறுவது வைவசுவத (7ஆம்) மன்வந்திரம் – 28ஆவது சதுர்யுகத்தின் கலியுகம். இதன் முடிவில் 29ஆவது சதுர்யுகத்தின் முதல் யுகமான ‘கிருத யுகம்’ துவங்கும்.

தர்மவிரோத செயல்களைக் காணும் பொழுது ‘கலி முற்றிவிட்டது’ என்று பொதுவாகக் குறிப்பிடும் மரபு உள்ளது. உண்மையில் இவை எல்லாவற்றையும் விஞ்சி நிற்கும் அளவுக்கு கலிக் கொடுமைகள் முற்ற இன்னும் எண்ணற்ற ஆண்டுகள் மீதமுள்ளது.

தற்காலத்தில் தங்களையே ‘கல்கி அவதாரம்’ என்று அறிவித்துக் கொண்டு சில மூடாத்மாக்கள் களம் இறங்கியுள்ளனர். ஆணவத்தின் உச்சத்தில் செயல்பட்டு வரும் இத்தகு சுயநலவாதிகளிடம் அறியாமையால் மக்களும் சென்று சிக்கிக் கொள்கின்றனர். இதுவும் கலியின் கொடுமைகளுள் ஒன்று.

நடைபெறும் அதர்ம நிகழ்வுகளை, கலியின் மீது பழியை ஏற்றி வைத்து கண்டும் காணாது இருந்து விடாமல், ஒவ்வொருவரும் தங்கள் சக்திக்கு உட்பட்டு, இயன்ற அளவில் அதர்மத்தை எதிர்த்து, தர்மத்தை நிலை நிறுத்த முயல வேண்டும் என்பதே இறைவனின் எதிர்பார்ப்பு.

Camphor 150 tablets

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *