காளி அன்னையை அறிவோம்

காளி அன்னையைப் பற்றிய சரியான புரிந்துணர்தல் நமக்கு தேவை. இன்றைய காலக்கட்டத்தில், பரவலாக வழிபடப்பட்டுவரும் தெய்வங்களில் காளி அன்னையும் ஒருவராவார். சக்தியின் பத்து மகாவித்யாகளில், ஒருவராக காளி அன்னை திகழ்கிறார்.

எங்கும் நிறைந்த சக்தி, எண்ணற்ற தோற்றங்களும் கீர்த்திகளும் நிறைந்தது. அந்த சக்தியின் ஒரு மாபெரும் வெளிபாடே ‘காளி’. காளி அன்னை பல்வேறு பெயர்களாலும் தோற்றங்களாலும் உபாசிக்கப்படுகிறார்.

ஆரம்பகால சாஸ்திர நூல்கள், காளி அன்னையை தீமைகளை அழிக்கும் சக்தி என்று குறிப்பிடுகின்றன. சாக்த மற்றும் தாந்திரீக மார்கங்களைச் சேர்ந்த இந்துக்கள், காளி அன்னையை முழுமுதற் தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். அன்னை தம் பக்தர்களுக்கு அடைக்கலம் அருளி, வரம் தந்து, தாயைப் போல் அரவணப்பு நல்குகிறார். தம் பிள்ளைகளை ‘தகாத செயல்கள் மற்றும் தகாத குணங்கள்’ என்ற அசுரர்களிடம் இருந்து பாதுகாத்து, பிள்ளைகளுக்கு எப்போது என்ன வேண்டுமென அறிந்து அதை வரமாக அருள்செய்து அரவணைக்கிறார், எல்லாம் வல்ல காளி அன்னை.

|| பெயர்க்காரணம்

காலம் என்பதன் பெண்பால் ‘காளி’. காலம் என்பதற்கு ‘கறுப்பு’ மற்றும் ’நேரம்’ போன்ற பொருள்கள் உள்ளன. காலம் என்பதை தெளிவாக விளக்கினால், ’பொருள்களை தோற்றத்திற்கும் மறைவுக்கும் உண்டாக்கும் இயற்கையின் மாறும் இயல்பு’ எனலாம்.

|| காளியைப் பற்றி சாஸ்திரங்கள்

காளி அன்னையைப் பற்றிய தெளிவான விளக்கங்கள் தேவி மஹாத்ம்யம் எனும் நூலில் உள்ளன. மஹாகாளி, யோக நித்ராவாகத் தோன்றியவர். மது மற்றும் கைட்டபா எனும் இரண்டு அசுரர்களை விஷ்ணு பகவான் அழிப்பதற்கு, காளி அன்னை உதவினார். பின்னர், சண்டா மற்றும் முண்டா எனும் இரண்டு அசுரர்களை அழிப்பதற்காக காளி அன்னை, துர்காதேவியின் நெற்றியில் இருந்து தோன்றினார். இதனால் காளி அன்னை, சாமுண்டா தேவி (சண்டா மற்றும் முண்டா ஆகிய அசுரர்களை அழித்த சக்தி) என்றழைக்கப்பட்டார்.

|| காளியின் தோற்றம்

காளி அன்னையின் தோற்றத்தை தரிசித்தவர்கள் அநேகம். அத்தகு பெரும்பேறு பெற்றவர்களுள் தலையாயினர் ராமகிருஷ்ண பரமஹம்சர். அன்னையின் தோற்றங்கள் பற்றி தேவி மஹாத்ம்யம் போன்ற நூல்கள் சித்தரிக்கின்றன. அன்னை பெரும்பாலும் இரண்டு முக்கிய தோற்றங்களில் சித்தரிக்கப்படுகின்றார். அவை சதுர்புஜ மற்றும் தசபுஜ தோற்றங்கள்.

அவ்விரண்டு தோற்றங்களிலும் அன்னையின் மேனி கரிய நிறத்துடனும், சிவந்த விழிகளுடனும், நா நீண்ட வடிவிலும் சித்தரிக்கப்பட்டிருக்கும். சதுர்புஜ தோற்றத்தில் நான்கு கரங்களுடனும், தசபுஜ தோற்றத்தில் பத்து கரங்களுடனும் அன்னை காட்சி தந்து அருள்பாலிக்கிறார்.

காளிகா புராணம், அன்னையை கரிய நிறமுடைய, பூரணமான அழகுடைய, சிம்ம வாகனத்தை உடைய, நீலத் தாமரைகளை ஏந்திய தேவி எனக் குறிப்பிடுகின்றது.

|| காளியின் தோற்றத்தில் மறைந்திருக்கும் ரகசியம்

காளி அன்னையின் பிரசித்திப் பெற்ற தோற்றம் சதுர்புஜ தோற்றமாகும். இத்தோற்றத்தில் அன்னை தம் நான்கு கரங்களிலும் வாள், திரிசூலம், கபாலம் மற்றும் பாத்திரம் ஏந்தியிருப்பார். அன்னை அபய முத்திரை மற்றும் வரதா முத்திரையுடனும் அருள்பாலிப்பார்.

** வாள் – அன்னை ஏந்தியிருக்கும் வாள் தூய அறிவின் வடிவாக அமைந்துள்ளது.

** கபாலம் (தலை) – அன்னை மற்றொரு கையில் வதம் செய்யப்பட்ட அசுரனின் தலையை ஏந்தியிருப்பார். அது மனிதர்களின் அகங்காரம் மற்றும் அறியாமையின் வடிவாக விளங்குகின்றது.

தூய்மையான ஞானத்தைக் கொண்டு அகங்காரத்தையும் அறியாமையையும் நீக்கிவிட வேண்டும், அதுவே அன்னையின் திருவருளை அடைவதற்கு மனிதர்கள் செய்யவேண்டிய கடமையாகும்.

** அபய மற்றும் வரத முத்திரை – அன்னையின் அபயமுத்திரை பக்தர்களுக்கு அடைக்கலம் அளிப்பதையும் வரத முத்திரை வேண்டியதை வேண்டிய நேரத்தில் அளிக்கும் தன்மையையும் உணர்த்துகின்றது.

** அன்னையின் நாக்கு – அன்னை தம் பற்களால் நாவை அடக்கிக் கொண்டு, அதை வெளியில் நீட்டியபடி காட்சித் தருவார். இது இயற்கையின் முக்குணங்களின் தத்துவத்தை விளக்குகின்றது. வெண்மையான பற்கள் சத்த்வ (தூய) குணத்தையும், சிவந்த நா ரஜஸ் (தீவிர ஆசை) குணத்தையும் உணர்த்துகின்றது. மனிதர்கள் தங்களின் ஆசைகளை தூய்மையான குணத்தின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவேண்டும். சுருக்கமாக சொல்லப் போனால், தூய்மையான ஆசைகளை மட்டுமே கொண்டிருக்கவேண்டும்.

** அன்னை அணிந்திருக்கும் கைகள் – வெட்டப்பட்ட கைகளை காளி அன்னை அணிந்திருப்பது போல, சில வேளைகளில் உவமையாக சித்தரிக்கப்பட்டிருக்கும். பக்தர்களின் கர்மவினைகளை அன்னை ஏற்றுக் கொண்டுள்ளார் என்பதே இதன் பொருளாகும். கர்மவினைகளுக்கு உவமையாக கைகள் காட்டப்படுகின்றன. அன்னையை தூய்மையான பக்தியுடன் வழிபடும் பக்தர்களின் கர்மவினைகளை அன்னை ஏற்றுக் கொள்கிறார்.

|| கொற்றவை என்ற காளி

பண்டைய தமிழகத்தின் பாலை நில மக்கள், காளி அன்னையை கொற்றவையாக வழிபட்டனர். இன்று கிடைப்பவற்றுள் மிகப் பழைய தமிழ் நூலான தொல்காப்பியத்தின் பொருள் இலக்கணத்தில் கொற்றவை நிலை என்னும் ஒரு பிரிவு சொல்லப்படுகிறது. போருக்குச் செல்வோர் கொற்றவையின் பெருமைகளைக் கூறி அத் தெய்வத்தை வழிபட்டுச் செல்லுதலே கொற்றவை நிலை எனப்படுகின்றது. இதர சங்கநூல்களிலும் காளியைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. திருமுருகாற்றுப்படையில், முருகபெருமானின் தாயாக கொற்றவை எனும் காளி கூறப்படுகின்றார்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஓம் ஸர்வ மங்கல மாங்கல்யே
ஷிவே ஸர்வார்த்த ஸாதிகே
ஷரண்யே த்ரயம்பிகே
கௌரி நாராயணி நமோஸ்துதே

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *