கேதார்நாத் கோயில்

இக்கோயில் கங்கையின் கிளை நதிகளுள் ஒன்றான மந்தாகினி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது. ரிஷிகேஷில் இருந்து 223 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இக்கோயில் கடல் மட்டத்தில் இருந்து 3,583 மீ (11,755 அடி) உயரத்தில் உள்ளது. இக்கோயில் எட்டாம் நூற்றாண்டில் ஆதி சங்கரர் இவ்விடத்திற்கு வந்தபோது கட்டப்பட்டதாக அறியப்படுகிறது. இன்றைய கோயில் பாண்டவர்கள் கோயில் எழுப்பிய இடத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இக்கோயில் பனிபடர்ந்த மலைகளும் பனியாறுகளும் சூழ்ந்த பீடபூமி மீது அமைந்துள்ளது. இக்கோயில் ஒரு கவர்ச்சியான கல் கோயில் ஆகும். கருவறைக்கு எதிரே நந்தி சிலை உள்ளது.

புராணம் :

 மகாபாரதப் போரில் தங்கள் உறவினர்களையே கொன்றதால் ஏற்பட்ட பாவத்தை போக்கிக்கொள்ள பாண்டவர்கள் காசிக்கு புனித யாத்திரை மேற்கொண்டனர். ஆனால் சிவபெருமான் கயிலாயம் சென்றிருப்பதை அறிந்த பாண்டவர்கள், காசியிலிருந்து கயிலாயம் நோக்கி பிரயாணம் செய்யத் தொடங்கினர். ஹரித்வார் வழியாக இமயத்தை அடைந்தபோது தொலைவில் சிவபெருமானை கண்டனர். ஆனால் சிவபெருமான் அங்கிருந்து மறைந்துவிட்டார். அந்த இடம் தற்போது குப்தகாசி என்ற பெயரில் வழங்கப்படுகிறது.

சிவபெருமானைத் தரிசிக்காமல் திரும்புவதில்லை என்ற உறுதியுடன் பாண்டவர்கள் குப்தகாசியில் இருந்து இமாலயப் பள்ளத்தாக்கில் இருக்கும் கௌரிகுண்ட் என்னும் இடத்தை அடைந்தனர். அங்கு அவர்கள் சிவபெருமானை தேடி அலைகையில் நகுலனும் சகாதேவனும் ஒரு வித்தியாசமான ஆண் காட்டெருமையைக் கண்டனர்.

பீமன் தனது கதாயுதத்தைக் கொண்டு அக்காட்டெருமையைத் தாக்க முயன்றான். ஆனால் அது சாதுரியமாகப் பீமனின் பிடியில் இருந்து தப்பிவிட்டது. ஆனால் பீமனின் கதாயுதம் அதன் முகத்தில் தாக்கியது. அக்காட்டெருமை தனது முகத்தை நிலத்தில் இருந்த பிளவு ஒன்றில் மறைத்துக் கொண்டது. பீமன் அதன் வாலை பிடித்து இழுக்க முயன்றான். அப்போது நிலத்தில் இருந்த பிளவு நேபாளம் வரை நீண்டது. அவ்விடம் தற்போது நேபாளில் தோலேஷ்வர் மகாதேவ் என்று வழங்கப்படுகிறது. அக்காட்டெருமையின் உடற்பகுதி கேதார்நாத்தில் இருந்தது.

காட்டெருமையின் உடற்பகுதி இருந்த இடத்தில் ஒரு ஜோதிர்லிங்கம் உண்டானது. அதன் ஒளியில் இருந்து சிவபெருமான் பாண்டவர்களுக்குக் காட்சியளித்து அவர்களின் பாவத்தைப் போக்கினார். அந்த முக்கோண வடிவ ஜோதிர்லிங்கம் கேதார்நாத் கோயிலின் கருவறையில் உள்ளது. கோயிலை சுற்றி பாண்டவர்களின் பல அடையாளங்கள் உள்ளன. பாண்டுகேஷ்வர் என்னும் இடத்தில் ராஜா பாண்டு உயிர் நீத்தார். இங்கிருக்கும் பழங்குடியினர் பாண்டவ நிருத்யம் என்ற நடனத்தை ஆடுகின்றனர்.

பாண்டவர்கள் சுவர்க்கத்திற்கு சென்ற இடமான சுவர்க்கரோகினி என்ற மலையுச்சி பத்ரிநாத்திற்கு சற்று தொலைவில் உள்ளது. பீமன் காட்டெருமை உருவத்திலிருந்த சிவபெருமானோடு சண்டையிட்டபோது சண்டையின் முடிவில் காட்சியளித்த சிவபெருமானுக்கு பீமன் நெய்யால் அபிஷேகம் செய்தான். அதன் நினைவாக இன்றும் கேதார்நாத்தில் இருக்கும் ஜோதிர்லிங்கத்திற்கு நெய்யால் அபிஷேகம் செய்யப்படுகிறது. நீரும் வில்வமும் வழிபாட்டிற்கு பயன்படுத்தப்படுகின்றன.

நர-நாராயணர் பத்ரிகா என்னும் கிராமத்திற்கு சென்று சிவபெருமானை வழிபட்டனர். அவர்களுக்குக் காட்சியளித்த சிவபெருமானிடம், உலக மக்கள் நன்மைக்காக சிவபெருமான் எப்போதும் இங்கு இருந்து அருள வேண்டும் என்று வேண்டினர். அவர்கள் வேண்டுதலை ஏற்ற சிவபெருமான் இமயத்தில் கேதார் என்னும் இடத்தில் ஜோதிர்லிங்க வடிவத்தில் திகழ்கிறார். அவர் கேதாரேஷ்வரர் என்று போற்றப்படுகிறார்.

 

 

 

Ganesha – Tanjore Painting

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *