கோமியம் குடிப்பது சரியா?

ஆயுர்வேதமும் சித்தவைத்தியமும் இந்தியர்களின் பாரம்பரிய மருத்துவம் ஆகும். இந்துக்களின் பாரம்பரிய மருத்துவமுறைப்படி, குறிப்பிட்ட ஒரு முறையில் தயாரிக்கப்படும் கோமியக் கலவைகள் சில நோய்களுக்கு மருந்தாக பரிந்துரைக்கப்படுகின்றன. பாரம்பரிய மருத்துவத்தில் ஈடுபாடு உள்ள இந்துக்கள், தங்களின் உடல் நலனைக் கருதி கோமியக் கலவையை மருந்தாக உட்கொள்கின்றனர். கேளிக்கைக்காகவோ அல்லது சுவைக்காகவோ கோமியக் கலவை பரிந்துரைக்கப்படுவதில்லை. கோமியம் என்பது ஆகாரம் கிடையாது; அது மருந்தாக மட்டுமே பயன்படுத்தப்படவேண்டும். இந்துதர்மத்தின் அன்னநியதிபடி கழிவுப்பொருள்கள் உணவாக உண்ணப்படக் கூடாது. சுத்திகரிக்கப்பட்ட கோமியக் கலவை நோய்களுக்கு மருந்தாக மட்டுமே உட்கொள்ளப்படலாம்.

விலங்குகள் மற்றும் தாவரங்களிலிருந்து உருவாக்கப்படும் மருந்துகள் பாரம்பரிய மருத்துவத்தில் மட்டுமல்ல, நவீன மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, நீரிழிவு (சக்கரை வியாதி) நோயாளிகளுக்கு மருந்தாகப் பயன்படும் இன்சுலின் (கணைய சுரப்பு நீர்), மாடுகளின் உடல் உள்ளுறுப்புகளில் இருந்து எடுத்து, சுத்திகரிக்கப்பட்டு மருந்தாக விநியோகம் செய்யப்பட்டன. இதுபோலவே, நோய்களிலிருந்து மீள்வதற்காக, உலகத்தார் பல நுணுக்கங்களைப் பின்பற்றுகின்றனர். அவற்றுள் சில மற்றவர்களுக்கு விநோதமாகவும் வித்தியாசமாகவும் தோன்றலாம். ஒரு காலக்கட்டத்தில் அவ்வாறு தவறாக மதிப்பிடப்பட்ட மருத்துவ முறைகளே இன்று சில மாற்றங்களோடு நவீன மருத்துவத்தில் கடைப்பிடிக்கப்படுகின்றன.

|| ஏன் ஆயுர்வேதம்? ||

நோய்கள் வருவதற்கு முன்னர் அதை தவிர்க்க முயற்சிப்பவர்களை விட நோய்கள் வந்த பின்னர் அதிலிருந்து தப்பிக்க முயற்சிப்பவர்களே அதிகம். நோய்களிலிருந்து தப்பிக்க பல தரப்பினர் பல முறைகளைக் கையாளுகின்றனர். சிலர் நவீன மருத்துவத்தை நாடுகின்றனர்; சிலர் பாரம்பரிய மருத்துவத்தை நாடுகின்றனர். அதுபோலவே, நோய்கள் ஏற்படாமல் தடுப்பதற்காகவும், ஏற்பட்ட நோய்களிலிருந்து மீள்வதற்காகவும் இன்று பலர் ஆயுர்வேத மருத்துவத்தை நாடுகின்றனர். நவீன மருத்துவத்தைக் காட்டிலும் ஆயுர்வேத மருத்துவம் தீங்கான பின்விளைவுகள் அற்றது என்பதால், பல தரப்பினர் ஆயுர்வேத மருத்துவத்தை நாடுவதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.

|| ஆயுர்வேதம் என்பது என்ன? ||

ஆயுர்வேதம் என்பது உபவேதங்களுள் ஒன்றாகும். ஆயுர்வேத நூல் மருத்துவம் சார்ந்த நூலாகும். இதில் இதர மருத்துவம் சார்ந்த குறிப்புகளுடன், நோய்களை தடுத்தல் மற்றும் நோய்களுக்கான நிவர்த்திகள் ஆகிய இரண்டும் கூறப்பட்டுள்ளன. ஆயுர்வேத நூலில் சில குறிப்பிட்ட நோய்களுக்கு மருந்தாககோமியம்கூறப்பட்டுள்ளது. கோமியத்தைப் பற்றிய குறிப்புகள் வாஸ்து சாஸ்திரம் மற்றும் சுஷ்ருதா சம்ஹிதை நூல்களிலும் உள்ளன. பஞ்சகாவ்யத்தின் தயாரிப்பிற்கும் கோமியம் பயன்படுத்தப்படுகின்றது. சினையாக (கர்ப்பமாக) இருக்கும் பசுவின் கோமியத்தில், சில தனித்துவமிக்க ஹார்மோன்களும் கனிமங்களும் கலந்திருக்கும் என கூறப்படுகின்றது. கோமியம் வேளாண்மைத் துறையிலும் பயன்படுத்தப்படுகின்றது.

||| ஆயுர்வேதத்தில் கோமியம் |||

ஆயுர்வேத நூலில், இரத்த சோகை, காய்ச்சல், தொழுநோய் மற்றும் வலிப்பு ஆகிய நான்கு வகை நோய்களுக்கு மருந்தாக கோமியக் கலவை (கோமியத்தோடு இதர மூலிகைகளைச் சேர்த்தல்) குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கூறப்பட்ட நோய்களுக்கு கோமியக் கலவையை தவிர்த்து இதர மருந்துமுறைகளும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

) இரத்த சோகை = சுத்திகரிக்கப்பட்ட கோமியம் + திரிபலா + பசும்பால்
திரிபலா என்பது மூலிகைகளான கடுக்காய் (Terminalia chebula), தான்றிக்காய் (Terminalia belerica), நெல்லிக்காய் (Emblica officinalis) ஆகிய முக்கனிகள்[2] சேர்ந்த கலவையே, திரிபலா என்றழைக்கப்படுகிறது.

) காய்ச்சல் = சுத்திகரிக்கப்பட்ட கோமியம் + கருப்பு மிளகு + தயிர் + க்ரிதா (ஆயுர்வேத நெய்)

) தொழுநோய் = சுத்திகரிக்கப்பட்ட கோமியம் + வேப்பம் பட்டை + ஆடாதோடை இலை + சாத்தாவாரி பட்டை + அலரி இலை

) வலிப்பு = சுத்திகரிக்கப்பட்ட கோமியம் + மரமஞ்சள்

|| கோமியத்தின் உட்பொருள் ||

கோமியத்தில் 95% நீரும், 2.5% யூரியாவும், எஞ்சியுள்ள 2.5% கனிமங்கள், ஹார்மோன்கள், என்ஸைம்கள் மற்றும் தாதுப்புகள் ஆகும்.

|| எது தகுந்த கோமியம் ||

ஒரு சில தரப்பினர், கரு தரிக்காத கன்னி பசுவிடம் இருந்து விடியலுக்கு முன்னர் கிடைக்கப்பெறும் கோமியம் மட்டுமே மருத்துவ குணமுடையது என நம்புகின்றனர். சுத்திகரிக்கப்பட்ட கோமியம் மட்டுமே குறிப்பிட்ட நோய்களுக்குப் பாதுகாப்பான மருந்தாக பரிந்துரைக்கப்படுகின்றது. இந்திய நாட்டு வகை மாடுகளில், குறிப்பிட்ட சிலவகை இன மாடுகளின் சுத்திகரிக்கப்பட்ட கோமியம் மட்டுமே மருத்துவ குணமுடையது.

|| கோமியம் நோயைத் தீர்க்குமா? ||

கோமியத்தை மருந்தாக அருந்துபவர்கள், அது உண்மையிலே மருத்துவ குணமுடையது எனவும், அதனால் அவர்களின் நோய்கள் குணமாகி உள்ளன எனவும் கூறுகின்றனர். இணையத்தின் மூலம் கோமிய கலவைகளை வாங்குபவர்களும், அது தங்களின் நோய்களுக்கு ஒரு சிறந்த நிவர்த்தியாக உள்ளது என கருத்திடுகின்றனர்.

கோமியத்தில் நோய்களைக் கட்டுப்படுத்தும் வல்லமை இருப்பது சில அறிவியல் ஆராய்ச்சிகளின் மூலம் நிரூபிக்கப்பட்டிருந்தாலும், அதற்கு வலுவான சான்றுகள் இல்லை என சில நவீன மருத்துவர்கள் புறக்கணிக்கின்றனர். மாற்று மருத்துவத்தால் (அல்டெர்னெட்டிவ் மெடிசன்) நவீன மருத்துவர்களின் தொழில் மற்றும் வருமானம் பாதிக்கப்படும் என்பதால் அவர்கள் அவ்வாறு கூறலான் என மற்றொரு தரப்பினர் கூறுகின்றனர்.

சுத்திகரிக்கப்பட்ட கோமியம் மட்டுமே மருத்துவ பிரயோகத்திற்கு பயன்படுத்தப்பட வேண்டும். அதுவே சுதாகாரமானதும் சுத்தமானதும் ஆகும்.

இறுதியாக, மாற்று மருத்துவத்தில் ஈடுபாடுடையவர்கள் கோமியத்தை மருந்தாக உட்கொள்வது சரியா தவறா என்று நிர்ணயிப்பதற்கு முன்னர், அதனால் அவர்களின் நோய்கள் நிவர்த்தி ஆகி உள்ளதா என்பதை நாம் ஆராய வேண்டும். கோமியத்தால் அவர்களுக்கு நன்மை ஏற்படுகின்றது என்றால், அதனால் அதை தவறு என்று நிர்ணயிக்கும் உரிமை நமக்கு கிடையாது. நமக்கு நவீன மருத்துவத்தில் மட்டுமே முழு ஈடுபாடும் நம்பிக்கையும் இருக்கிறது என்றால், நாம் நம்முடைய நாவை அடக்கிக் கொண்டு நவீன மருத்துவத்தையே நாடலாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *