தீட்சை – அதன் வகைகள்

`தீ’ என்றால் மலம். `ஷை’ என்றால் ஒழித்தல்.

மலமாகிய அழுக்கை ஒழித்தலே தீட்சை.

மனிதன் இறைநிலையை அடைவதற்கு மந்திரக்கலை, தந்திரக்கலை, உபதேசக்கலை ஆகிய மூன்று படிநிலைகள் உள்ளன.

மந்திரக்கலை, தந்திரக்கலை இரண்டும் சரியை, கிரியை, யோக நெறிமுறைகளில் உள்ள குருமார்கள் போதிப்பதாகும்.

நான்கு எழுத்து, ஐந்து எழுத்து, ஆறு எழுத்து, எட்டு எழுத்து உள்ளிட்ட பல மந்திரங்களை  உச்சரித்து செய்யும் பயிற்சிகள் மந்திரக்கலை ஆகும். இதை போதிப்பவர்கள் மாந்திரீகர்கள் ஆவர்.

முத்திரைகளையும், யந்திரங்களையும் செய்யும் பயிற்சிகள்  தந்திரக்கலை ஆகும். இதைப் போதிப்பவர்கள் தாந்திரீகர்கள் ஆவர்.

இந்த இரண்டு கலைகளைக் காட்டிலும் உன்னதமான, ஒப்புயர்வற்ற ஞானநிலைக்கான கலையே உபதேசக்கலையாகும். இதை போதிக்கும் குருமார்கள் ஞானகுரு ஆவார்கள். இந்த ஞானகுருக்களே தன் சீடர்களுக்கு  உண்மையான தீட்சைகளை வழங்குகிறார்கள்.

தீட்சைகள் ஆறு வகைப்படும்.  அவையாவன :

பரிச தீட்சை,    நயன தீட்சை,     பாவனா தீட்சை,     வாக்கு தீட்சை,     யோக தீட்சை, நூல் தீட்சை

பரிச தீட்சை : ஒரு பறவை முட்டையிட்டு, அதன் மேல் உட்கார்ந்து, அதன் உடல் வெப்பத்தினால் முட்டைபொரிந்து குஞ்சு வெளியாவதைப் போன்றது, பரிச தீட்சையாகும். ஞானகுரு தனது திருக்கரத்தினால் சீடருடைய நெற்றியில் தொட்டு, மூலதாரத்தில் சுருண்டு உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி ஆற்றலை மேல் நிலையில்– புருவ மத்தியிலும், தலை உச்சியிலும் – நிலை நிறுத்துவதே பரிச தீட்சையாகும்.

நயன தீட்சை : ஒரு மீன் முட்டையிட்டு அதனைத் தன் கண்களால் பார்த்து பார்வையின் வெப்பத்தினால் முட்டை பொரிந்து, மீன் குஞ்சு வெளியாவதைப் போன்றது நயன தீட்சை. ஞானகுரு தமது திருக்கண்ணால் சீடரின் கண்களைப் பார்த்து புறத்தில் செல்லக்கூடிய சீடரின் மனத்தை, அகத்தில் பார்க்க அருளுவதே நயன தீட்சையாகும்.

பாவானா தீட்சை : ஒரு ஆமை கடற்கரையில் முட்டைகள் இட்டு, பின்பு கடலுக்குள் சென்று முட்டைகள் பொரிந்து குஞ்சுகளாக மாறவேண்டும் என்று இடையறாது நினைத்துக் கொண்டிப்பதைப் போன்றது பாவனா தீட்சை ஆகும். ஞானகுரு தன்னைப் போன்றே தன் சீடர்களையும் உடல் உணர்வு நிலையை விட்டு, உயிர் உணர்வில் நிலைக்கச் செய்து, சகஜத்திலேயே வெளிக்குள் வெளி கடந்து சும்மா இருக்கும் சுகமான, எண்ணமற்ற மோனநிலையாம் ஆனந்தப் பெருவெளியில் நிலைக்க வைப்பதே பாவனா தீட்சை.

யோக தீட்சை :  ஞானகுரு தன் அருளால் அகார, உகார, மகார, சிகார, வகார நிலைகளை உணர்த்துவதே யோக தீட்சையாகும். தலை உச்சியாகிய சிகாரத்திலிருந்து 12 அங்குல உயரத்திலுள்ள அண்டத்திலுள்ள பிண்டமான பெருவெளியில் நிலைத்து வெளிக்குள் வெளிகடந்து, சும்மா இருப்பதுவே வகார திருநிலை. இதனை ஞானகுரு, அக அனுபவமாக உணர்த்துவதே யோக தீட்சை ஆகும்.

வாக்கு தீட்சை : ஞானகுரு, ஞானிகள் அருளிய திருமறைக் கருத்துகளையும், தான் தனக்குள் மெய்ஞான அனுபவமாக உணர்ந்ததையும், இறைத்தன்மையில் நிலைத்து நின்று, உள்ளன்போடு கேட்கும் சீடர்களுக்குச் சொல்லி, அவர்தம் உணர்வில், உயிரில், ஆன்மாவில் கலந்து, ஞான அதிர்வுகளை உருவாக்கி, என்றென்றைக்கும் வழிநடத்துவது வாக்கு தீட்சையாகும்.

நூல் தீட்சை : சரியை, கிரியை, யோக மார்க்க நூல்களை நீக்கி, ஞானத்திற்காக மட்டும் மெய் உணர்ந்த அருள் ஞானிகள் அருளிய திருமறைகளையும், அவர்கள் அனுபவித்த பேரானந்த அனுபவங்களையும், அதன் வழி நடக்கும் போது ஏற்படும் நிறைவான அனுபவக் கருத்துக்களையும் நூலாக்கி சீடர்களுக்கு வழிகாட்டும் நூலாக அருள்வது நூல் தீட்சையாகும்.

உண்மையில், யோக தீட்சை என்பது மூச்சுப்பயிற்சியோ, வாசியோகம் என்றால் என்னவென்று அறியாமலேயே மூச்சை உள்ளுக்குள்ளே ஊதிச்செய்யும் பயிற்சிகளோ அல்ல. எண்ணமற்று, சகஜத்திலேயே, மனதில் மோனநிலையைப் பெற்று சிவவெளியில் லயமாகி இருப்பதே வாசி யோகம் என்பதைப் புரிந்து கொள்க.

எடுத்த இப்பிறப்பில் தானே மெய்யான ஞானகுருவினைத் தேடிக் கண்டடைந்து, பணிந்து, அர்ப்பணித்து, ஞானதீட்சையைப் பெற்று, மன அழுக்குகளையும், உயிர் மற்றும் ஆன்ம அழுக்குகளையும் நீக்கப் பெற்று, மாசற்று தன்னை உணர்ந்து, தனக்குள் இறை நிலையை உணர்ந்து, இறைத்தன்மையில் இரண்டறக் கலந்து, அதில் கரைந்து என்றும் நித்தியராக வாழ்தலே சிறப்புடையது.

 

Brass Annapoorani

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *