நமஸ்காரம்

ஆறு வகை வணக்கங்கள்:

பாரதிய கலாச்சாரத்தில் ஒருவர் மற்றொருவரை சந்திக்கும் போது, மரியாதையின் அடையாளமாக இரண்டு கைகளையும் கூப்பி நமஸ்காரம் செய்வர். இவ்வாறு ஒருவர் மற்றொருவருக்கு தரும் மரியாதைகள் ‘பிரணாமங்கள்’ அல்லது ‘வணக்கங்கள்’ என்றழைக்கப்படுகின்றன. நம்முடைய பாரம்பரியத்தில் ஆறு வகையான பிரணாமங்கள் உள்ளன. அவை:

1) அஷ்டாங்கணம்

உடலின் எட்டு அங்கங்கள் (கால்விரல், மூட்டு, வயிறு, மார்பு, கைகள், தாடை, மூக்கு, நெற்றி முதலியவை) தரையில் படும்படி, முழுமையாக விழுந்து வணங்குதல். (தெய்வங்களுக்கு மட்டும்)

2) ஷாஷ்டாங்கம்

உடலின் ஆறு அங்கங்கள் (கால்விரல், மூட்டுகால், கைகள், தாடை, மூக்கு, நெற்றி முதலியவை) தரையில் படும்படி, முட்டிபோட்டு விழுந்து வணங்குதல். (தெய்வங்களுக்கு மட்டும்)

3) பஞ்சாங்கம்

உடலின் ஐந்து அங்கங்கள் (கால்விரல், மூட்டுகால், மூட்டுகை, கைகள், நெற்றி முதலியவை) தரையில் படும்படி, முட்டிபோட்டு விழுந்து வணங்குதல். (தெய்வங்களுக்கு மட்டும்)

4) நமஸ்காரம்

இரு கைகளையும் கூப்பி தலைக்கு மேல், நெற்றிக்கு நேர் அல்லது நெஞ்சகத்தின் அருகில் வைத்து வணங்குதல். (எல்லோர்க்கும்)
5) அபிநந்தனம்

இரு கைகளையும் கூப்பி நெஞ்சகத்தின் அருகில் வைத்துக் கொண்டு, தலையைச் சாய்த்து வணங்குதல். (பணிவு)

6) சரணஸ்பர்ஷம்

கால்களைத் தொட்டு வணங்குதல். (தெய்வம், தாய், தந்தை, குரு, சான்றோர்)

வணக்கங்கள் யாருக்கு உரித்தானவை?

ஆறு வகை வணக்கங்களில் முதலான மூன்று வகை தெய்வங்களுக்கு மட்டுமே உரித்தானவை. அவை கோயில்களிலும் வழிபாட்டு அறைகளிலும் தெய்வங்களை வழிபடும்போது பின்பற்ற வேண்டிய வணக்க முறைகள்.

அஷ்டாங்கனம் எனப்படும் எட்டு அங்க வணக்கமுறையை ஆண்களும், பஞ்சாங்கம் எனப்படும் ஐந்து அங்க வணக்கமுறையைப் பெண்களும் கடைப்பிடிப்பார்கள். ஷாஷ்டாங்கம் எனப்படும் ஆறு அங்க வணக்கமுறையை யோகாசன சூரிய நமஸ்காரப் பயிற்சியின் போது கடைப்பிடிப்பார்கள்.

அடுத்தபடியான நான்காவது மற்றும் ஐந்தாவது வணக்கமான ‘நமஸ்காரமும்’ ’அபிநந்தனமும்’ தெய்வங்கள், மனிதர்கள் ஆகியோருக்கு உரித்தானவை. மனிதர்களைத் தவிர்த்து மற்ற ஜீவராசிகளுக்கும் ‘நமஸ்காரம்’ மூலமாக மரியாதை செலுத்தலாம். இரண்டு கைகளையும் ஒன்றாக இணைத்து கூப்பிக் கொள்ளும் போது, ”நீயும் நானும் சமமானவன்” என்ற தத்துவம் தெரியப்படுத்தபடுகின்றது. மேலும், கைகளைக் கூப்பி தலையை சாய்த்து மரியாதை செலுத்தும் போது ஒருவரின் பணிவுடைமை காட்டப்படுகின்றது.

இறுதியாக, கால்களைத் தொட்டு வணங்கும் முறை தெய்வங்கள், தாய், தந்தை, குரு மற்றும் சான்றோர்கள் ஆகியோருக்கு மட்டுமே உரித்தானவை. தெய்வங்களின் கால்களைத் தொட்டு வணங்குதல், இறைவனிடம் சரண்புகுதல் தத்துவத்தைக் குறிக்கின்றது. மற்றவர்களின் கால்களைத் தொட்டு வணங்குதலும் வெவ்வேறு தத்துவமுடையது.

ஒரு சின்ன உதாரணத்தைப் பார்ப்போம்,
போகவேண்டிய ஊருக்கு வழி தெரியாவிட்டால், வழி தெரிந்த ஒருவரின் கால் தடங்களைப் பின்பற்றி சென்றாலே போதும்; நாமும் ஊரைச் சென்றடையலாம். அதுபோல வாழ்க்கையில் சிறந்தவர்களின் அறிவுரைகளையும், கருத்துகளையும், போதனைகளையும் நாம் பின்பற்றினால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம். இதுவே கால்களைத் தொட்டு வணங்கும் முறை உணர்த்தும் தத்துவமாகும்.

கண்டவர்கள் காலில் எல்லாம் விழுவது சரியல்ல. எல்லா வகையான மனிதர்களுக்கும் “நமஸ்காரம்” முறையில் மரியாதை தரவேண்டும். ஆனால் கால்களைத் தொட்டு வணங்கும் முறை தெய்வம், தாய், தந்தை, குரு மற்றும் சான்றோர் ஆகியோருக்கு மட்டுமே உரித்தானது.

Narad Bhakti Sutra DVD in English

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *