நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் சேஷாத்ரி சுவாமிகள் நடத்திய அற்புதங்கள்!

அவரின் திருவரலாறு :

சிறு வயதிலேயே, அன்னையால் இறை கல்வி ஞானம் பெற்று, அன்னையின் இடுப்பில் கைக்குழந்தையாக, ஒரு நாள் காஞ்சி வரதராஜப்பெருமாள் திருக்கோவிலுக்கு செல்லும் வழியில், திருவிழாக் காலம் என்பதால், கடைகள், பொம்மைகள் என்று ஊரே, கொண்டாட்டமாக இருந்தது. அப்போது, ஒரு பொம்மை வியாபாரி, வெங்கலத்தால் ஆன தவழும் கிருஷ்ணர் சிலைகளை கூவி விற்றுக் கொண்டிருந்தான். கிருஷ்ணர் சிலையின் அழகில் சிறுவன் சேஷாத்ரி மயங்கி, தனக்கும் ஒரு பொம்மை வேண்டும் என அடம் பிடிக்க, ஏனோ தாய்க்கு வாங்க விருப்பமின்றி, குழந்தை அழ அழ, வேகமாக நடந்தாள். இதைக் கண்ட வியாபாரி, அம்மா, கிருஷ்ணர் போல இருக்கும் குழந்தையை அழ விடாதீர்கள், காசு வேண்டாம், ஒரு பொம்மையை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூற, சிறுவனாக இருந்த சேஷாத்ரி, ஆர்வமாக, ஒரு பொம்மையைத் தானே எடுத்துக் கொண்டார்.

மறு நாள் நடந்த அதிசயம் :

மறுநாள் காலை, அன்னையுடன் கோவிலுக்கு செல்லும்போது, அந்த வியாபாரி, தாயின் காலில் விழுந்தான். அம்மா, திருவிழா நாட்களில், நூறு பொம்மை விற்பதே, கடினம், நேற்று உங்கள் குழந்தை கை பட்டதால், ஆயிரத்துக்கும் மேலான பொம்மைகள் விற்றுத் தீர்ந்தன. இது தங்கக்கை அம்மா, என்று குழந்தை சேஷாத்ரியின் கையைப் பிடித்து, கண்களில் ஒற்றிக்கொண்டான். காற்றிலே கலந்த கற்பூரத்தின் தெய்வீக மணம் போல, இந்தத் தகவல் காஞ்சி நகரெங்கும் பரவி, தங்கக் கை சேஷாத்ரி, என்று குழந்தையின் புகழ், அன்று ஊரெங்கும், பரவியது.

சுவாமிகளின் இள வயது வாழ்க்கை: ஏழாவது வயதில் தந்தையை இழந்த சேஷாத்ரிக்கு மணமுடிக்க, அவர் தாயார் முயன்றாலும், மகனுக்கு திருமண பந்தத்தில் நாட்டம் இல்லை, துறவறமே, அவர் சிந்தனை எனும் செய்தியறிந்து, மனம் வாடி, உபவாசம் இருந்து உயிர் நீத்தாள். தாய் தந்தை இருவரையும் இழந்த, சேஷாத்ரி, நாள் முழுதும் சித்தப்பா வீட்டில் இறை வழிபாட்டிலேயே இருந்தார். சமயங்களில், விநோதமாக நடந்துகொள்ள ஆரம்பித்தார். நாட்கணக்கில் வீட்டுக்கு வராமல் இருப்பார், திடுமென ஒரு நாள் அழுக்கு வேட்டி, தாடி என்று வருவார், ஆயினும் முகத்தில் ஒரு ஒளி தோன்றி, அவரின் கருணைமிகு முகத்தை வெளிக்காட்டியது.

கோபமுற்ற அவர் சித்தப்பா : அன்னை அபிராமியின் அருளைப்பெற்ற அபிராமிப் பட்டரைப்போல, சேஷாத்ரி சுவாமிகளும், சாலையில் செல்லும் பெண்களின் காலில் விழுவார், அடிக்கடி குளிப்பார், ஏகாந்தமாக வானத்தைப் பார்த்தபடி நிற்பார். இதேநிலை தொடர்ந்து, சேஷாத்ரி சுடுகாடு எனும் மயானத்தில் இரவு நேரங்களில் மந்திர உச்சாடனம் செய்வது அறிந்து, அவரின் சித்தப்பா கோபம் கொண்டு வினவியபோது, மயானம் சிவன் உறையும் இடம், அங்கே ஜபித்தால், சீக்கிரம், சிவன் வருவார் என்றாராம், சேஷாத்ரி. இதற்கிடையில் சந்நியாச கோலம் கொண்டு, வீட்டின் பக்கம் செல்லாமல், இறை சிந்தனையில் மனம் ஒன்றி, பித்தராக அலைந்தார் சுவாமி.

சுவாமிகளின் அந்தர் தியானம்! இதனிடையே, சுவாமியின் பெற்றோருக்கு திதி செய்வதற்காக, இவரைத் தேடி, ஓரிடத்தில் கண்டுபிடித்து, எல்லோரும் சேர்ந்து, சித்தப்பா வீட்டுக்கு தூக்கி வந்தனர். சந்நியாசிக்கு ஏது திதி போன்ற கடமைகளெல்லாம், என்றாலும், யாரும் அதை கவனத்தில் கொள்ளாது, இவரை ஒரு அறையில் வைத்துப்பூட்டி விட்டனர். சடங்குகளில் கலந்துகொள்ள வைக்க, அறையைத் திறந்து இவரை அழைத்துச்செல்ல, வந்தவர்கள், உள்ளே சேஷாத்ரியைக் காணாது திகைத்தனர். அந்தர் தியானம் எனும் யார் கண்ணிலும் படாமல், பூட்டிய அறையில் இருந்து, மறைந்த சேஷாத்ரி சுவாமிகளின் அற்புதத்தையைக் கண்டு, ஊரே, வியந்தது.

எங்கும் பரவிய ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளின் புகழ் : இந்த நிகழ்விற்குப் பின் அவரை, எல்லோரும் பார்த்தது, தவ ஞானிகள் யாவரும் உறையும் திருவண்ணாமலையில்தான். மலையில் பல இடங்களில், ஒரு பித்தனைப் போல, பல காலம் நடந்து வந்து கொண்டிருந்தார். வேறு எங்கும் செல்லாமல், அண்ணாமலையிலேயே, திருக்கோவிலில், மற்றும் பல இடங்களில் சுற்றிச் சற்றி வந்தார். இந்த கால கட்டத்தில், மக்கள் அவரின் ஆற்றலை உணர்ந்து கொண்டனர்.

மகான் இரமண மகரிஷியைக் கண்ட, ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்! இதே காலகட்டத்தில், அத்வைத தத்துவத்தின் ஞான ஒளி ஸ்ரீ இரமணர், கடும் தியானத்தில், அண்ணாமலையார் திருக்கோவிலின் பாதாள லிங்கக் குகை எனும் இடத்தில் இருந்தபோது, விளையாட்டுச் சிறுவர்கள் அவர் மீது கற்களை வீசி, அவரின் தவத்துக்கு இடையூறு அளிக்க முயன்றனர். இதைக்கண்ட, சேஷாத்ரி சுவாமிகள், அந்த சிறுவர்களை விரட்டும் சமயத்தில், அங்கு வந்தவர்கள் கேட்கும்போது, “உள்ளே சின்ன சாமி இருக்குது பாரு!” சொல்லிவிட்டு வேகமாகச் சென்று விட்டார். வந்தவர்கள் குகைக்கு சென்று பார்த்து அதிர்ந்தனர், சிறு வயது தோற்றத்தில் காணப்பட்ட மகான் இரமணர், அங்கே, ஆன்ம தவத்தில், புற சிந்தனை எதுவும் இன்றி கடும் மோன நிலையில் இருந்தார். இதன் பின்னர் ஒருமுறை, சேஷாத்ரி சுவாமிகள் இரமணரை சந்தித்ததாகவும், மௌன நிலையில் இருக்கும் இரமணரை பேச வைத்து, அவர் பின்னர் அத்வைத தத்துவம் பற்றி இவரிடம் பல மணி நேரங்கள் உரைத்ததாகவும் கூறுவார்கள்.

அவரைப் பற்றிய நூல் : அத்வைத தத்துவங்கள் இல்லாத பக்தி மார்க்கமும், இறைவனை அடைய ஒரு வழியே என்று, அண்ணாமலை உச்சியை நோக்கி, இவர் வணங்கிக் கூறியதாக, அடியார்கள் கூறுகின்றனர். இரமணர் மீது அன்பு கொண்ட சேஷாத்ரி சுவாமிகள், அவரைப்பற்றி ஒரு நூலும் இயற்றி இருக்கிறார்கள்.

ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளின் அற்புதங்கள் : ஒருமுறை இரவில், ஒரு உணவு விடுதிக்குள் நுழைந்து, தண்ணீர் நிரம்பிய ஒரு அண்டாவில், மைதா மாவு மூட்டையைப் பிரித்துக் கொட்டிவிட்டார். பதறிய ஊழியர்கள், ஒரு மூட்டை மாவை வீணடித்துவிட்டாரே, என்று இவரைத்திட்டி விரட்டினர். சிறிது நேரத்தில், அங்கு வந்த ஒரு வாகனத்தில் இருந்து இறங்கியவர்கள், உணவு விடுதிக்குள் நுழைந்து, அருகில் சர்க்கஸ் கூடாரம் அமைக்க வந்திருக்கிறோம், எங்களுக்கு உணவு கிடைக்குமா என்று கேட்க, அப்போதுதான், ஊழியர்களுக்கு, சுவாமிகளின் செய்கைக்கு விளக்கம் கிடைத்து, மெய்சிலிர்த்து நின்றனர். எளிமையின் சின்னமாக விளங்கிய, சேஷாத்ரி சுவாமிகளின் தரிசனம், அகந்தையை அழித்து, ஞானத்தை அளிக்கும்! நினைக்க முக்தி தரும், அண்ணாமலையில் உறையும் சேஷாத்ரி சுவாமிகள், ஈசனின் தங்கக் கை மைந்தன் அல்லவா!

செல்வம் செழித்தது : கண்டவருக்கும், தொழுதவருக்கும், அவரின் பார்வையே, பல வியாதிகளை, பாதிப்புகளை, அவர்களிடம் இருந்து விரட்டியது. வறுமையில் உழன்றவர்களை செல்வச் செழிப்பில், திளைக்க வைத்தார், அவர் சென்றாலே, கடைகளில் வியாபாரம் அன்று தூள் பறந்தது. சுவாமிகளின் அருள் வெள்ளம், நகரில் பரவியது.

அவரின் அதிஷ்டானம் இருக்குமிடம் :

அடியார் வாழ்வில் பல அற்புதங்களை நிகழ்த்திய அருளாளர் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள், ஸ்தூல சரீரத்தில் இருந்து மறைந்த பின்னும், அவர் அதிஷ்டானத்தில் சூட்சுமமாக இருந்துகொண்டு, வணங்க வரும் அடியார்களின் துயர்களை, இன்றும் களைந்து, அவர்களின் நல்வாழ்விற்கு அருள் ஒளியை ஏற்றி வருகிறார். சேஷாத்ரி சுவாமிகளின் அதிஷ்டானம், திருவண்ணாமலையில் மகான் ஸ்ரீ இரமணர் ஆசிரமத்தின் அருகிலேயே, உள்ளது.

எளிமையின் சின்னம்:

எளிமையின் சின்னமாக விளங்கிய, சேஷாத்ரி சுவாமிகளின் தரிசனம், அகந்தையை அழித்து, ஞானத்தை அளிக்கும்! நினைக்க முக்தி தரும், அண்ணாமலையில் உறையும் சேஷாத்ரி சுவாமிகள், ஈசனின் தங்கக் கை மைந்தன் அல்லவா!

Sphatika Mala

 

 

 

Leave a Reply