மரத்தை வெட்டினால் மனிதன் சாவான்..!

அரசமரத்தை வெட்டுவதோ அதன்மீது ஏறுவதோ பெரிய பாவம் என்று என்தகப்பனார் அடிக்கடி சொல்வார் எதற்காக என்று காரணம் கேட்டால் அவருக்கு சொல்ல தெரியாது. பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள் அதை ஏன் எதற்கு என்று காரணம் கேட்காமல் பின்பற்ற வேண்டியது நமது வேலை அதைமட்டும் ஒழுங்காக செய்தால் எந்த பிரச்சனையும் வராது எனவே காரணம் கேட்காதே என்று கூறிவிடுவார். என் தகப்பனார் அப்படி சொல்வது சரியா? தவறா? என்பதை பற்றி நான் கேட்கவில்லை. உண்மையாகவே அரசமரத்தை வெட்டினால் பாவம் ஏற்படுமா?

சிவபெருமானுடைய வியர்வை துளியிலிருந்து தோன்றியது “ருத்ராட்சம்” என்று சொல்வார்கள் அதே போல நாராயணனின் வலது கண்ணிலிருந்து தோன்றியது அரசமரம் என்ற ஐதீகம் காலகாலமாக இருந்துவருகிறது. மற்ற மதங்களிலிருந்து இந்துமதம் சிறப்பான முறையில் தனிப்பட்டு திகழ்வதற்கு இந்த உலகில் உள்ள அனைத்து பொருள்களுமே இறைவனின் அம்சம் அல்லது இறைவனோடு ஏதாவது ஒருவகையில் மிக நெருங்கிய தொடர்பு கொண்டது என்று கூறுவதில் தான் அடங்கி இருக்கிறது.

மரம் என்பது ஒற்றை அறிவுடையது அதை போய் இறைவனோடு சம்பந்தபடுத்தலாமா? இது இறைவனை இழிவுபடுத்துவதாக ஆகாதா? என்று சிலர் நினைக்கலாம். இதே மாதிரியான நினைப்புகள் மனித ஜாதியின் மனதில் எப்போது தோன்ற ஆரம்பித்ததோ அப்போதே இந்த உலகம் கெட்டுப்போக துவங்கிவிட்டது எனலாம். மண்ணும் கல்லும் இறைவனாகுமா? இது தவறான சென்டிமென்ட் என்று கருதியதனால் நிகழ்ந்தது என்ன?

இந்த கேள்விக்கு நல்ல பதிலை தருவது சீனநாட்டின் இப்போதைய இயற்கை நிலவரமாகும். அங்கு தெய்வத்தோடு சம்பந்தபட்டிருந்த அனைத்தும் பொதுவுடைமை பெயரால் நாட்டு வளர்ச்சி என்ற போலிக்காரணங்களால் சூறையாடப்பட்டன. அதன் விளைவாக சீனாவின் சுற்றுச்சூழல் சீர்கெட்டு சமப்பாடு இழந்து, இன்று அபாயகரமான நிலைக்கு வந்துவிட்டது. நமது நாடும் இப்போது ஏறக்குறைய அதே பாதையை நோக்கி மிக வேகமாக நடைபோட்டு கொண்டிருக்கிறது.

வேப்பமரத்தில் மாரியம்மன் இருப்பதும், வில்வமரத்தில் சிவபெருமான் இருப்பதும், துளசியில் உள்ளங்களை கொள்ளை கொள்ளும் கண்ணபெருமான் சிரிப்பதும், வெறும் புராணக்கதைகள் அல்ல. அதில் மிகு ஆழமான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இருக்கிறது ஆயிரம் சட்டங்கள் ஏற்படுத்தாத ஒழுங்கை ஒரு சிறிய மத நம்பிக்கை ஏற்படுத்திவிடும் என்பதை போல கடவுளோடு சம்பந்தபடுத்தபட்ட மரங்களும் அழிவிலிருந்து தப்பித்து வந்தன இன்று பகுத்தறிவு வளர்ந்து போனதனால் வாழ்க்கைக்கு தேவையான அறிவு நசிந்துகொண்டே வருகிறது.

அரசமரத்திற்கு வடமொழியில் “அஸ்வத்தா” என்றொரு பெயரும் உண்டு. அஸ்வத்தா என்றால் நம்பிக்கையோடு வழிபடுபவர்களின் பாவங்களை போக்குபவள் என்பது பொருளாகும். தமிழில் உள்ள “திருமுட்ட புராணம்” என்ற நூல் அரசமரத்தை வெட்டுவதனால் துர்மரணம் வறுமை தீராத பிணி போன்றவைகள் ஏற்படுவதாக கூறி எச்சரிக்கை செய்கிறது.

மரங்கள் என்பது பூமியின் இடப்பரப்பை அடைத்துக்கொள்ள படைக்கப்பட்ட தேவையற்ற பொருள் அல்ல. மரம் என்பது பூமிக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட வரம் மட்டுமல்ல மனிதனுக்கும் உயிர்வாழ கொடுக்கப்பட்ட கொடையும் ஆகும். அந்த மரங்களை அழித்தால் கண்டிப்பாக மனிதர்கள் அழிய வேண்டியது தான். அதனால் தான் நமது பெரியவர்கள் அரசமரத்தை வெட்டினாலும் அவமரியாதை செய்தாலும் பாவம் என்று சொன்னார்கள்.

 

Agarpatti Wooden Stand

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *