விரதம் (நோன்பு)

விரதம் என்றால் பக்தியோடு அனுசரிக்கப்படும் செயல் எனப் பொருள்படும். தற்காலத்தில் உணவும் நீரும் உண்ணாமல் நோன்பிருத்தல், புலால் உணவை மறுத்து நோன்பிருத்தல் போன்ற விரதமுறைகள் பழக்கத்தில் உள்ளன. உண்மையில் விரதம் என்றால் என்ன? அதைப் பற்றி சாஸ்திரங்கள் என்ன சொல்கின்றன என்பதை பார்ப்போம்.

|| வேதங்களில் விரதம் ||

விரதம் என்பதன் வேர்ச்சொல் ’வ்ர்’ ஆகும். விரதம் என்பது ஒவ்வொரு மனிதனாலும் அனுசரிக்கப்பட வேண்டிய சுயக்கோட்பாடு என விளக்கப்படுகின்றது. இந்த சுயக்கோட்பாட்டை அனுசரிப்பதன் மூலமாக, பிரபஞ்சத்தின் நியதியோடு ஒத்திசைந்து வாழ தேவையான பக்குவம் கிடைக்கும் எனக் கூறப்படுகின்றது.

”நாநானம் வா உநொ தியோ வி வ்ரதானி ஜனானாம்”

“ஒருவன் எந்த தொழில் செய்தாலும், அத்தொழிலில் அவன் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு, தன் தொழிலை சிறப்பாக ஆற்றுவான் என தீர்மானம் கொண்டிருப்பான் எனில் – அதுவும் ஒருவகையில் அவன் நோற்றிருக்கும் விரதமே” என்று ரிக்வேதம் 9.112.1 ஸ்லோகத்தில் செய்யும் தொழிலை சிறப்பாக செய்வதே விரதம் என கூறப்படுகின்றது.

|| மூன்று வகை விரதம் ||

1) காயிக விரதம் – உடல் தொடர்பான விரதம். உதாரணமாக, உண்ணாவிரதம். இதுவே மிகவும் எளிதான விரதம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

2) வாசிக விரதம் – வாக்கு தொடர்பான விரதம். உதாரணமாக, சத்தியவிரதம் (உண்மையை மட்டுமே பேசுதல்), மௌன விரதம் (அமைதியைக் கடைப்பிடித்தல்) மற்றும் தேவாரம், பிரபந்தம், மந்திரங்கள் உச்சரித்தல்.

3) மானச விரதம் – மனம் தொடர்பான விரதம். மனத்தில் எழும் உணர்ச்சிகள் மற்றும் பொல்லாங்குகளைக் கட்டுப்படுத்தி, மனத்தை ஒருநிலையுடன் இறைவன் மீது வைத்திருத்தல். இதுவே மிகவும் கடினமான விரதம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

|| நோன்பு நோற்கும் விதிமுறைகள் ||

உடலால் நோற்கும் விரதங்கள் சாஸ்திரங்களின் பரிந்துரைப்படியும் வழிகாட்டியின்படியும், நோற்கப்படவேண்டும். சாஸ்திரங்களுக்கு புறம்பான விரதங்கள் தீமையை ஏற்படுத்தும் வல்லமை உடையவை.

சில தவறான மதங்கள், ஒரு மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளைக்கும் சுமார் 11 முதல் 21 மணி நேரங்கள் வரை நீர் மற்றும் உணவு உண்ணா விரதங்களை நோற்க கட்டாயப்படுத்துகின்றன. அதிலும் குறிப்பாக, கோடைக் காலங்களில் இத்தகைய விரதமுறைகள் உடலுக்கு மிகவும் தீங்கானவையாகும். இவ்வாறு கடுமையான விரதங்கள் ஒருவனுக்கு தாமஸ குணங்களை அதிகப்படுத்துகின்றன. இத்தகைய விரதமுறைகளை நோற்பவர்கள் மிகவும் கொடூர குணமுடையவர்களாக உருவாகும் வாய்ப்புள்ளது.

இந்துதர்ம சாஸ்திரங்கள், குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட விதமான நோன்புமுறைகளைப் பரிந்துரைக்கின்றன. உதாரணமாக, புலால் உணவை மறுக்கும் விரதமுறை. புலால் உணவுகளை தவிர்த்து காய்கறிகளையும் பழங்களையும் அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலமாக, உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் நீங்கி உடலுக்கு தேவையான சத்துகள் போதுமான அளவு கிடைக்கின்றன. புலால் மறுக்கும் விரதம் வாரத்திற்கு ஒரு முறையாவது நோற்கப்படவேண்டும்.

மௌன விரதம் என்பது பேசாமல் மட்டும் இருப்பதல்ல. தானும் தன்னைச் சுற்றியிருக்கும் சூழலும் அமைதியாக இருக்கவேண்டும். மௌன விரதம் என்பது வாக்கு மட்டுமல்லாமல் மனமும் சேர்ந்து நோற்கும் விரதமாகும். உதாரணமாக, இந்தோனேசியாவின் பாலி இந்துக்கள் ஒவ்வொரு வருடமும் தங்களின் புத்தாண்டு அன்று, ஒரு நாள் முழுவதும் பூரண மௌனத்தை அனுசரிக்கின்றனர்.

|| கோலமிடுதலும் ஒரு விரதம் தான் ||

பெண்கள் அதிகாலையில் எழுந்து நீராடி, ஓர் அமைதியான சூழலில், முழுமையான கவனத்துடன் பொறுமையுடன், வாசலில் கோலமிடுதல் கூட ஒரு விரதமுறை தான். கோலங்கள், ரங்கோலிகள் போன்றவை விரத மண்டலங்கள் என சொல்லப்படும் ஒருவகை வரைதல் முறையை அடிப்படையாகக் கொண்டு வரையப்படுகின்றன. விரத மண்டலங்களை துல்லியமாக வரைவதற்கு நிறைய கவனமும் பொறுமையும் தேவை. மேலும், ஜியொமெட்ரிக்கல் பேட்டர்ன்களோடு (கேத்திர கணிதவியல் வடிவங்கள்) ஒத்திருக்கும் விரத மண்டலங்கள், பெண்களின் ஜியொமெட்ரிக் இண்டெலிஜென்ஸை தூண்டுகின்றன. இது போன்ற செயல்களில் பெண்கள் ஈடுபடுவதால், அவர்களின் மனம் அமைதியையும் திருப்தியையும் அடைகின்றது.

Leave a Reply