எல்லா இந்துக்களும் மேற்கொள்ள வேண்டிய யாகங்கள்

யாகம் என்பதை யஜ்ஞம் அல்லது வேள்வி என்று குறிப்பிடுவர். யாகம் என்றால் தியாகம், வழிபாடு, கொடுத்தல் அல்லது மரியாதை செலுத்துதல் எனப் பொருள்படும். பொதுவாக யாகங்கள் என்பது அக்கினி குண்டத்தில் நெய் முதலிய பொருட்களை இட்டு மந்திரங்கள் உச்சரித்தல் ஆகும். ஆனால் சாந்தோக்கிய உபநிடதம் இவ்வாறு கூறுகின்றது,

“உண்மையில் யாகம் என்று சொல்லப்படுவது யாதெனில் தூய அறிவும் ஒழுக்கநெறியும் உடைய மனிதனின் வாழ்க்கைமுறை தான்.” (சாந்தோக்கியம் 8.5.1)

ஒரு மனிதன் தன் வாழ்நாளில் ஒழுக்கநெறியுடனும் தூய்மையான அறிவுடனும் வாழ்தலே ஒரு யாகம் தான் என்று சொல்லப்படுகின்றது. இது எல்லா இந்துக்களும் அவசியம் மேற்கொள்ள வேண்டிய யாகமாக அமைந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக இந்துக்கள் மேற்கொள்ள வேண்டிய ஐந்து முக்கிய யாகங்கள் அமைந்துள்ளன. அவை பஞ்ச மகா யஜ்ஞங்கள் என்றழைக்கப்படுகின்றன. இதைப் பற்றி கிருஷ்ண யஜுர்வேதம் 2.10-இல் குறிப்பிடப்பட்டுள்ளது. (யஜ்ஞம்=யாகம்)

1) பிரம்ம யாகம் = பகவத் கீதை, திருக்குறள் போன்ற நல்ல நூல்களைக் கற்றல், நல்லறிவை வளர்த்துக் கொள்தல், தன்னுடைய நிலையை மேம்படுத்திக் கொள்தல், மற்றவர்களுக்கு நல்லறிவைக் கற்றுத் தருதல். இது மிகவும் முக்கியமான யாகமாகும்.

2) தேவ யாகம் = தினமும் ஒருவேளையாவது தியானத்தில் ஈடுபட வேண்டும். தெய்வங்களுக்கு நன்றி கூறும் விதமாக வழிபாட்டில் ஈடுபட வேண்டும். கோவில்களுக்குச் சென்று வழிபட வேண்டும்.

3) பித்ரு யாகம் = முன்னோர்களுக்கு நன்றி கூறும் விதமாகவும் அவர்களை நினைவுகூறும் வகையிலும் அவர்களுக்கு தர்ப்பனம்/நினைவு நாள் மேற்கொள்ள வேண்டும். மேலும் முன்னோர்கள் சொன்ன நல்லச் சொற்களையும் அவர்கள் வகுத்து தந்த நல்வழியையும் கடைப்பிடிக்க வேண்டும்.

4) மனுஷ்ய யாகம் = சக மனிதர்களை சமமாக நோக்கவேண்டும். மனிதர்களிடம் கருணை காட்டவேண்டும். தேவைபடும் மனிதர்களுக்கு உதவ வேண்டும். பசித்தவருக்கு உணவு தரவேண்டும்.

5) பூத யாகம் = பூதம் என்றால் இயற்கைவாழிகள் எனப் பொருள்படும். இயற்கையையும் இயற்கை அன்னையின் இதர குழந்தைகளையும் அன்போடு பராமரிக்க வேண்டும். இயற்கை அன்னைக்கு நன்றி கூறும் விதமாக மிருகங்களுக்கு உணவளிக்கும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.

இந்துக்கள் இந்த ஐந்து யாகங்களையும் மேற்கொள்ள ஊக்குவிக்கப்படுகின்றனர். இந்த ஐந்து யாகங்களும் மிக உயர்வான மற்றும் தலைசிறந்த யாகங்கள் ஆகும். இதை மேற்கொள்ள அக்கினி குண்டமோ அல்லது நெய்யோ தேவைபடாது மாறாக நல்ல மனம் தான் தேவைபடும். அதுதானே இந்த காலத்தில் கிடைப்பதற்கு அரிதான ஒன்று. அத்தகு கிடைப்பதற்கு அரிதான ஒன்றைக் கொண்டு இறைவனைப் பூஜிப்போம். நல்பேறு அடைவோம். ஓம்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *