நவராத்திரி துவங்கி நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அம்மன் வழிபாடு மிகச்சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இதே தினங்களில் நைவேத்தியமும் அதிகமாக சாப்பிட வேண்டிய சூழல் உண்டாகும்.
இனிப்பு பதார்த்தங்களில் இருக்கும் வெள்ளைச் சர்க்கரை உடல் நலனுக்கு தீங்கு விளைவிப்பவையாக இருப்பதால் பலரும் சாப்பிட தயக்கம் காட்டுகிறார்கள். சில நைவேத்தியங்களில் சர்க்கரைக்கு பதிலாக வெல்லப் பாகு சேர்க்க வேண்டும்.
இந்த வெல்லப்பாகு உடல் நலனுக்கு அதிக பலனை தரக்கூடியது. இனிப்புக்கு இனிப்பாகவும், உடல் ஆரோக்கியத்திற்கும் பயன்படும் வெல்லப்பாகுவினால் வேறு என்னென்ன நன்மைகள் இருக்கிறது தெரியுமா?

வெல்லப் பாகில் கால்சியம், மக்னீசியம், மாங்கனீஸ், பொட்டாசியம், தாமிரம், இருப்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் சோடியம் போன்ற உடலுக்குத் தேவையான அத்தியாவசிய தாதுச் சத்துக்கள் உள்ளன. மேலும், வைட்டமின் பி 3, நியாசின் (Niacin), வைட்டமின் பி 6, தயாமின், ரிபோஃப்ளேவின் ஆகியவையும் உள்ளன. இதில் அதிக அளவில் கார்போஹைட்ரேட்டும், குறைந்தளவு கொழுப்புச்சத்து மற்றும் நார்ச்சத்தும் இருக்கிறது

வெல்லப்பாகில் உள்ள தாமிரம், இரும்புச்சத்து ஆகியவை உடலில் ரத்த விருத்தியை அதிகரிக்கும். இதனால் ரத்த ஓட்டம் சீராகும். ரத்தச்சோகை நீங்கும். இது, ரத்தத்தையும் சுத்தம் செய்யக்கூடியது.இதில் உள்ள தாமிரம் நம் உடலில் அதிக அளவில் ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்வதால், உடல் உறுப்புகளுக்குத் தேவையான ஆக்சிஜன் சீராக கிடைக்கும். இது, வளர்சிதை மாற்றத்துக்கு உதவும்.

உமிழ்நீரைப் பெருக்கி, சாப்பிட்ட உணவு எளிதில் செரிமானமாக உதவும். இது, உணவுக்குழாய், வயிறு என உடல் உறுப்புகளையும் சுத்திகரிக்கும் ஆற்றல் கொண்டது
இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் வயிற்றுப் புண்களை ஆற்றக்கூடியவை. இதிலுள்ள சோடியம், பாஸ்பேட் போன்றவை மலச்சிக்கல் நீங்க உதவும்.

இதில் சுத்திகரிக்கப்பட்ட வெள்ளைச்சர்க்கரையில் உள்ளதைவிட அதிகமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை புற்றுநோய்ச் செல்களை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டவை. மேலும், இதயம் தொடர்பான நோய்கள் வருவதையும் தடுக்கும்.

இதில் உள்ள கால்சியம் மற்றும் இரும்புச்சத்துகள் எலும்புகளை வலுவாக்கும். ஆஸ்டியோபொரோசிஸ் (Osteoporosis) போன்ற எலும்பு தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கும்.

உடலில் மெக்னீசியத்தின் குறைபாட்டால் ஏற்படும் உயர் ரத்த அழுத்தம், தலைவலி, தசைப்பிடிப்பு ஆகியவற்றைச் சரியாக்கும். உடல் சோர்வை நீக்கும்.

இதில் உள்ள மாங்கனீஸ் ஆண்களின் பாலியல் ஹார்மோன்களின் சுரப்பை அதிகரிக்கும். நரம்பு மண்டலங்கள் சீராகச் செயல்பட உதவும். விந்தணுக்களின் எண்ணிக்கைய அதிகரித்து, ஆண்களுக்கு ஏற்படும் மலட்டுத்தன்மையைப் போக்கும்.

இதில் கால்சியம், மக்னீசியம் போன்ற சத்துகள் நிறைவாக உள்ளன. இது, பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ரத்த இழப்பால் ஏற்படும் ரத்தசோகை, கால்சியம் பற்றாக்குறையால் ஏற்படும் எலும்புத் தேய்மானம், மூட்டுவலி போன்றவற்றுக்குச் சிறந்த தீர்வு தரும்.
கர்ப்பிணிகளின் உடல் எடையை அதிகரிக்காமல், அதேநேரத்தில் உடலுக்கு வலு சேர்க்க உதவும்.