நித்தியகல்யாணி – மருத்துவ பயன்கள்

பயன்கள்:

நித்தியகல்யாணி வேர், உடல் தளர்ச்சியைக் கட்டுப்படுத்தும்; இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கும்; அதிமூத்திரம், களைப்பு, மிகுதாகம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும். நித்தியகல்யாணி பூக்களில் இருந்து தோல் நோய்களைக் குணப்படுத்துவதற்கான களிம்புகள் தயாரிக்கப்படுகின்றன.

நித்தியகல்யாணி 1 மீட்டர் வரை செங்குத்தாக வளரக்கூடிய சிறுசெடி வகைத் தாவரமாகும். இலைகள், எதிரெதிராக, நீள்வட்ட வடிவிலோ, தலை கீழ் முட்டை வடிவத்திலோ அமைந்திருக்கம்.

நித்தியகல்யாணி மலர்கள், ஐந்து இதழ்களைக் கொண்டது. இளஞ்சிவப்பு அல்லது வெள்ளை நிறமானவை. நுனியில் 2, 3 கொத்துக்களாகக் காணப்படும். எல்லா பருவங்களிலும் இந்த தாவரம் பூத்துக் குலுங்குவதால் நித்ய கல்யாணி என்கிற பெயரைப் பெற்றது.

நித்தியகல்யாணி பழங்கள் இரட்டையானவை. நிறைய விதைகளுடன் கூடியவை. காக்கைப் பூ, சுடுகாட்டுப் பூ, சுடுகாட்டு மல்லிகை, கல்லறைப் பூ ஆகிய மாற்றுப் பெயர்களும் இந்த தாவரத்திற்கு உண்டு.

நித்தியகல்யாணி தமிழகமெங்கும் தானே வளர்கின்றது. பாழ் நிலங்கள், சாலையோரங்களில் அதிகமாகக் காணலாம். அழகுத் தாவரமாக வீடுகளிலும் வளர்க்கப்படுகின்றது. முழுத் தாவரமும் மருத்துவப் பயன் கொண்டது. பூ, வேர் ஆகியவை அதிகமாக மருத்துவத்தில் பயன்படுபவை.

நித்திய கல்யாணி வெள்ளை அணுக்களின் அதிகரிப்பால் ஏற்படும் இரத்தப் புற்றுநோயை எதிர்க்கும் மருத்துவப் பயன் கொண்டது. இதன் இந்த மருத்துவக் குணம் உயர்நிலை மருத்துவ ஆய்வுகள் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

நித்தியகல்யாணி  இந்தியாவின் பல பகுதிகளில் பெருமளவில் பயிர் செய்யப்படுகின்றது. பின்பு, மருந்து தயாரிப்பிற்காக ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

சிறுநீர் தாரை நோய்கள் சரியாக நித்தியகல்யாணி பூக் கஷாயம் தினமும் நான்கு வேளைகள் 25 மிலி அளவு சாப்பிட வேண்டும். அல்லது வேரை காயவைத்து தூள் செய்து வைத்துக் கொண்டு, ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வெந்நீர் குடித்து வர வேண்டும்.

உடல் அசதி குணமாக 5 நித்தியகல்யாணி பூக்களை ½ லிட்டர் நீரில் இட்டு பாதியாகக் சுண்டக் காய்ச்சி குடிக்க வேண்டும். இதைப் போல ஒரு நாளைக்கு 3 வேளைகள் 5 நாள்கள் வரை சாப்பிடலாம்.

நீரழிவு கட்டுபட நித்தியகல்யாணி வேர்த்தூள் 1 சிட்டிகை அளவு சுடுநீரில் கலந்து உள்ளுக்குச் சாப்பிட வேண்டும். ஒரு நாளைக்கு 3 முறைகள் ஒரு வாரம் வரை தொடர்ந்து சாப்பிடலாம்.

 

Saffron

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *