பழங்களில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

ஆப்பிள்:

நம் நாட்டு சிம்லா ஆப்பிள் இளஞ்சிவப்பாக அதிகச் சதையோடு இருக்கும். இதைச் சாதாரணமாக நீரில் கழுவிச் சாப்பிடலாம். ஆனால்,  ஃபிரான்ஸில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, இங்கே கிடைக்கும் ஆப்பிள், அடர் சிவப்பு  நிறத்தில் இருக்கும். மேலே ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும். இந்த ஆப்பிள்கள், மூன்று மாதங்கள் வரைக்கும் கெடாமல் இருக்க, இவற்றின் தோல் மேல் மெழுகைத் தடவிவிடுகிறார்கள். எனவே, இந்த ஆப்பிள்களை வாங்கினால், தோலை கட்டாயமாக அகற்றிவிட்டுத்தான் சாப்பிட வேண்டும்.
எந்த ஆப்பிளாக இருந்தாலும் காம்பைக் கிள்ளிப் பார்க்க வேண்டும். உள்ளே லேசான பச்சை நிறம் தெரிந்தால், அது நல்ல ஆப்பிள். இதை வாங்கலாம். சிவப்பாக இருந்தால், அதிமாகப் பழுத்தது; சீக்கிரம் அழுகிவிடும். வாங்கக் கூடாது.

பழங்கள்

மாதுளை:

கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் விளையும் மாதுளைகள் அதிகத் தரமானவை. சுவைமிக்கவை. அதிக சிவப்பாக இருக்கும் மாதுளைகள் ஆஃப்கானிஸ்தான், காபூலில் இருந்து இறக்குமதி செய்யப்படுபவை.இவற்றை வாங்கும்போது கவனம் தேவை.
மாதுளையின் மேல் தோலை நசுக்கிக் பார்க்கவும். தோல் கடினமாக இருந்தால், நல்ல மாதுளை. மிருதுவாக இருந்தால், அதிகம் பழுத்த அல்லது கெட்டுப்போன மாதுளை. கெட்டுப்போன பூச்சி உள்ள மாதுளையில் கருப்புப் புள்ளிகள், துளைகள் இருக்கும்.

மாதுளை

திராட்சை

சமீபகாலமாக விதையில்லாத மரபணு மாற்றப்பட்ட சிறிய பச்சை திராட்சைகள் பிரபலமைடையத் தொடங்கிவிட்டன.  விதையில்லாத பச்சை திராட்சைகளைவிட, விதையுள்ள பெரிய நாட்டு திராட்சை சுவைமிகுந்தது; உடலுக்கு நன்மை தருவது.
திராட்சை வாங்கும்போது அதன் காம்பு பச்சையாக இருக்கிறதா என்று பார்க்கவும். அப்படி இருந்தால், அது நல்ல திராட்சை. காம்பு கறுப்பாக இருந்தால், அதிகம் பழுத்த திராட்சை. திராட்சையை எலுமிச்சைச் சாறு கலந்த தண்ணீர், அல்லது உப்புத் தண்ணீரில் ஊறவைத்துச் சாப்பிடுவது நல்லது. இதனால் கை மூலமாகப் பரவும் கிருமித்தொற்றுகள் நீங்கும்.

திராட்சை

ஆரஞ்சு, சாத்துக்குடி

இவற்றில் இரண்டு வகைகள் உள்ளன. அடர்ந்த மஞ்சள் நிறம்கொண்ட, சிறிதாக இருக்கும் கமலா ஆரஞ்சு; இள மஞ்சள் நிறம்கொண்ட, அளவில் பெரிதாக இருக்கும் சாத்துக்குடி. `கமலா ஆரஞ்சு’ என்று அழைக்கப்படும் நாட்டு ஆரஞ்சு, கொடைக்கானல், பெங்களூரு, நாக்பூர் ஆகிய இடங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. பழுக்காத, பச்சை நிறமுள்ள சாத்துக்குடி சாப்பிட ஏற்றதல்ல. இதை வாங்கக் கூடாது. பழத்தின் மேல் பகுதியை அழுத்திப் பார்க்க வேண்டும். பழத்தின் மேல் மற்றும் அடிப்பகுதி கெட்டியாக இருக்கவேண்டும். மிருதுவாக இருந்தால் அதிகம் பழுத்தது என்று அர்த்தம். இது  சீக்கிரம் கெட வாய்ப்புள்ளது. இதனை வாங்கக் கூடாது.  பெரிய பழத்தை வாங்கக் கூடாது. இதன் உள்ளே சதை அதிகமாகப் பழுத்திருக்கும். சீக்கிரம் கெட்டுவிடும்.

சாத்துக்குடி

பப்பாளி

மரபணு மாற்றப்பட்ட பப்பாளியில் கறுப்புப் புள்ளிகள் இருக்காது. கடைக்காரர்கள்,  நாட்டுப் பப்பாளியை `நீட்டுப் பப்பாளி’ என்று அழைப்பார்கள். இதன் சதைப் பகுதி சிவப்பாக இருக்கும்; விதை இருக்கும்; சுவை அதிகமாக இருக்கும். கனியாத, பச்சையாக உள்ள பப்பாளியை வாங்கக் கூடாது.
மரபணு மாற்றப்பட்ட பப்பாளியில் விதைகள் இருக்காது; உட்பகுதி மஞ்சளாக இருக்கும்; சுவை குறைவாக இருக்கும்.
வீட்டில்  பப்பாளியை இரண்டு நாட்களுக்கு மேல் வைத்திருந்தால்,  ஃபங்கஸ் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இதனைத் தவிர்க்க பழத்தைக் காகிதத்தில் சுற்றிவைக்கலாம்.

 பப்பாளி

வாழை

மரபணு மாற்றப்பட்ட வாழை புத்தம் புதிதாக, கருப்புப் புள்ளிகள் இல்லாமல் பளபளவென இருக்கும். பழத்தோல் அடர்த்தியாக இருக்கும். சுவை குறைவாக இருக்கும். இதனைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால்,  பலவிதமான உடல் உபாதைகள், பாதிப்புகள் ஏற்படலாம். இதனைக் கட்டாயம் தவிர்க்கவேண்டும். நாட்டுப்பழங்களில் பூச்சிகடித்ததன் அடையாளமாக, கறுப்புப் புள்ளிகள் இருக்கும். பழத்தோல் மெல்லியதாக இருக்கும். சதைப்பகுதி அதிகமாக இருக்கும். சுவையும் அதிகமாக இருக்கும். இவை தினமும் சாப்பிட ஏற்றவை.

வாழை

மாம்பழம்

இன்று, `மல்கோவா’, `பங்கனப்பள்ளி’ ரக மாம்பழங்கள், கார்பனேட் கல் போட்டு குறுகியகாலத்தில் செயற்கையாகப் பழுக்கவைக்கப்படுகிறன. நல்ல பழங்கள் எவை என சில அறிகுறிகளைவைத்துக் கண்டுபிடித்துவிடலாம். இயற்கையாகப் பழுத்த மாம்பழங்களில் கறுப்புப் புள்ளிகள் இருக்கும். பழத்தின் அனைத்துப் பகுதிகளும் சமமாகப் பழுத்திருக்காது. சில இடங்கள் கடினமாக, பழுக்காமல் இருக்கும். பழத்தின் மேல் பால் கறை இருக்காது. பார்க்க, பளபளப்பாக இருக்காது. இனிப்புச் சுவையுடன் இருக்கும். புளிப்பு சுவை இருக்காது.

மாம்பழம்

அன்னாசி

நல்ல அன்னாசிப்பழம், எல்லா இடங்களிலும் சமமாகப் பழுத்திருக்காது. பழத்தின் அடிப்பகுதியை அழுத்திப் பார்த்தால், கடினமாக இருக்க வேண்டும். மிருதுவாக இருந்தால், கெட்டுப்போன பழமாகவோ, அதிகமாகப் பழுத்த பழமாகவோ இருக்க வாய்ப்புள்ளது.

அன்னாசி

தர்பூசணி

கர்நாடகா, மகாராஷ்ட்ரா, ஆந்திர மாநிலங்களில் விளையும் மஞ்சள் தர்பூசணி தமிழகத்தில் விற்பனையாகின்றன. இவற்றைவிட இளம் பச்சை நிறம்கொண்ட, `வரி தர்பூசணி’ உடலுக்கு நல்லது. இவை சென்னை, கல்பாக்கம், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் விளைகின்றன.   மரபணு மாற்றப்பட்ட, `ஊதா நிற தர்பூசணி’ இந்த ஆண்டு விரைவில் தமிழகக் கடைகளுக்கு வர உள்ளது.

தர்பூசணியைத் தட்டிப் பார்த்து வாங்கவேண்டும். தட்டும்போது ‘தங்’, ‘தங்’ எனத் தண்ணீர் சத்தம் வர வேண்டும். ‘டப்’,’டப்’ எனச் சத்தம் வந்தால், பழம் அதிகமாகப் பழுத்துவிட்டது என்று அர்த்தம். இதனை வாங்கக் கூடாது.

தர்பூசணி

 

 

Sandal soap

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *