பெண்களே வாழ்க்கையில் முன்னேற முதுகெலும்பு முக்கியம்

Benefits:

தகுந்த மருத்துவப் பரிசோதனை மூலம் நோயை கண்டறிந்து தகுந்த சிகிச்சை செய்து கொண்டால் தீராத முதுகுவலியையும் முடிவுக்கு கொண்டு வரலாம்

நமக்கு வரும் அன்றாடத் தொந்தரவுகளில் முதுகுவலி முதன்மை இடத்தில் உள்ளது. அநேகமாக நம்மில் 90 சதவீதம் பேருக்கு வாழ்வில் ஒரு தடவையாவது முதுகுவலி வந்திருக்கும். ஒரு இடத்தில் தொடர்ந்து உட்காரவே முடியவில்லை என்றும், குனிந்து நிமிர்வதற்குள் உயிரே போய் விடும் போல் உள்ளது என்ற புலம்பலை பெரும்பாலானோர் வீட்டில் நித்தம் கேட்கலாம்.

வாழ்க்கையில் முன்னேற முதுகெலும்பு முக்கியம். முதுவலி அடிக்கடி ஒருவருக்கு வருவதற்கு மிக முக்கிய காரணம் உடற்பயிற்சி இல்லாதது தான். உடற்பயிற்சியும் சரியான முறையில் செய்யவேண்டும். இல்லையென்றால் முதுகுவலி கூடுவதற்கு வாய்ப்புண்டு. தொடர்ந்து கனத்த பொருட்களை தூக்குபவர்கள் (சுமை தூக்குவோர்), அதிக நேரம் குனிந்து வேலை செய்பவர்கள் (விவசாயி), தொடர்ந்து இருக்கையில் அமர்ந்து வேலை செய்பவர்கள் (அலுவலர்கள், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், வாகன ஓட்டுனர்), அதிக தூரம் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்வோருக்கு முதுகுவலி அடிக்கடி வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. முதுகுவலி வரும் காரணங்களை ஐந்து நிரிவுகளாக பிரித்துக் கொள்ளலாம்.

1. தண்டுவட எலும்பு அமைப்பு மற்றும் அதை கட்டுப்படுத்தும் தசைகள், தசை நார்களில் இருந்து வரும் முதுகுவலி. இந்த வகை முதுகுவலி நாம் வேலை செய்யும் போது அதிகமாக இருக்கும். படுத்து ஓய்வு எடுத்துக் கொண்டால் குறைந்து விடும். இது அதிகமானோருக்கு வரும் முதுகுவலி ஆகும். இந்த வகை முதுகுவலியை சரியான பயிற்சி மூலமாக குணப்படுத்திக் கொள்ளலாம். பயிற்சியை தொடர்ந்து வந்தால் அடிக்கடி வலி வராமல் தடுத்துக் கொள்ளலாம்.

2. முதுகு எலும்பு அமைப்பின் ஊடே இருக்கும் டிஸ்க் என்ற ஜவ்வானது, தேய்ந்து, பிதுங்கி வெளியே தள்ளப்பட்டால், நரம்பு மண்டலத்தில் அழுத்தம் வர வாய்ப்பு உள்ளது. அவ்வாறு அழுத்தப்பட்ட நரம்பினால் முதுகுவலியுடன் பின்னந்தொடை மற்றும் கெண்டைத் தசையில் வலி ஏற்படும். மேலும் பாதத்தில் மதமதப்பு வரும். இதனால் தீராத வலி ஏற்பட்டால் சாவித்துவார அறுவை சிகிச்சை மூலம் நரம்பு அழுத்தத்தை சரிசெய்து கொள்ளலாம்.

3. மூட்டு வாத நோயின் பாதிப்பால் முதுகுவலி வரவாய்ப்பு உள்ளது. இதற்கு “ஆங்கைலோசிங் ஸ்பாண்டைலிட்டில்” என்று கூறுவார்கள். இந்த நோய் 20 முதல் 40 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு வரும். இந்த நோயின் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் ஓய்வெடுத்த பின் அதிக வலியும், உடற்பயிற்சி மற்றும் வேலை செய்யும் போது வலி நிவாரணமும் கிடைக்கும். சரியான பயிற்சி மூலம் இந்த நோயின் தன்மையை கட்டுப்படுத்தலாம்.

4. “ஆபத்தான முதுகுவலி” ஒரு சிலருக்கு வருவதுண்டு. பெரும்பாலும் 40 வயதுக்கு மேல் வரும். இந்த வகை முதுகுவலி எந்தநேரமும் இருந்து கொண்டே இருக்கும். இந்த வகை முதுகுவலி, தண்டுவட எலும்பில் தொற்றுக்கிருமியோ, காசநோயோ அல்லது புற்றுநோய் பாதிப்பால் வருவதுண்டு. இதற்கு உடனடியாக மருத்துவம் பார்க்கவில்லை என்றால் விளைவுகள் விபரீதமாக வாய்ப்பு உள்ளது.

5. எலும்பு தொய்வு நோயினால் அதிகமான பெண்கள் 50 வயதிற்கு மேல் முதுகுவலியினால் அவதிப்படுகிறார்கள். ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதற்கு சரியான முறையில் மருத்துவம் செய்து கொண்டால் பிற்காலத்தில் வரும் முதுகெலும்பு முறிவில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். மாலை வெயிலில் உடற்பயிற்சிடன் அன்றாட உணவில் போதிய அளவு சுண்ணாம்புச்சத்து மற்றும் வைட்டமின் டி சேர்த்துக் கொண்டால் எலும்பு தொய்வு நோயில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

முதுகுவலி பெரும்பாலும் தண்டுவட அமைப்பில் இருக்கும் கோளாறினால் வருகிறது. சில சமயம் நமது வயிற்றுப் பகுதியில் ஏற்படும் நோய்களினாலும் முதுகுவலி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். உதாரணமாக கணைய வீக்கத்தினாலோ, வயிற்றுப்புண் முற்றிப்போனாலோ, கர்ப்பப்பையை சுற்றி தொற்றுக் கிருமி பரவினாலோ, சிறுநீரக கோளாறினாலோ முதுகுவலி வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக சிசேரியன் மூலம் குழந்தை பெற்றெடுத்தவர்களுக்கு சாதாரண விகிதத்தைவிட அதிக அளவில் முதுகுவலி வருவதுண்டு. அதை தண்டுவடத்தில் மயக்க மருந்து செலுத்தியதால் வந்தது என்று கூறுவது தவறு. ஆபரேசன் செய்த இடம் நன்கு ஆறிய பிறகு மருத்துவரின் ஆலோசனையோடு தகுந்த பயிற்சி செய்து வந்தால் முதுகுவலி வராது என்பதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்.

தகுந்த மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் எந்த பகுதியின் செயல் இழப்பினால் முதுகுவலி வருகிறது என்பதை அறியலாம். அதன் மூலம் நோயை கண்டறிந்து தகுந்த சிகிச்சை செய்து கொண்டால் தீராத முதுகுவலியையும் முடிவுக்கு கொண்டு வரலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *