விட்டமின் சி அதிகம் கொண்ட முந்திரி பழம்

முந்திரி பழம் நம்மில் பலர் அடிக்கடி ருசித்தது கிடையாது. ஆனால் இதனுடைய அசத்தலான இனிப்பு கலந்த புளிப்பு சுவை பெரும்பாலோரை கவர்ந்திழுக்கும்.

முந்திரிப் பருப்பினை பற்றி எல்லோரும் நன்கு அறிவர். ஆனால் முந்திரி பழத்தினை வெகு சிலரே தெரிந்திருப்பர்.

இப்பழமானது பொதுவாக முந்திரி ஆப்பிள் என்றழைக்கப்படுகிறது. இப்பழம் ஓர் ஆண்டில் குறிப்பிட்ட ஒரு பருவத்தில் மட்டும் கிடைக்கிறது.

முந்திரி பழம் உண்மையில் பழமல்ல. இது போலி பழவகையைச் சார்ந்தது. உண்மையில் பழம் என்பது முந்திரிக் கொட்டை ஆகும். இக்கொட்டையினுள் முந்திரிப் பருப்பு காணப்படுகிறது.

நாம் முந்திரிப் பழம் என்றழைக்கும் பகுதி பூவின் தடித்த காம்பு பகுதி ஆகும்.

இப்பழம் நீள் வட்டமாக பேரிக்காய் வடிவில் காணப்படுகிறது. இது பளபளப்பான மெல்லிய நீர்சத்து மிக்க மேல் தோலினை கொண்டுள்ளது.

இப்பழத்தின் மேல்தோல் மெல்லிதாக இருப்பதால் இப்பழம் விரைவில் சேதமுற்று சீக்கிரம் கெட்டு விடும். எனவே இப்பழத்தினை வெளியிடங்களுக்கு கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.

மேலும் இப்பழம் பறித்த 24 மணி நேரத்திற்குள் கெட்டுவிடும். இதனால் இப்பழம் எல்லா இடங்களிலும் பரவலாகக் கிடைப்பதில்லை.

முந்திரி அனார்க்காடியம் என்ற தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. இதனுடைய அறிவியல் பெயர் அனார்க்காடியம் ஒசிடென்டேல் என்பதாகும்.

தாவரத்தை உண்ணும் விலங்குகளை போலிப்பழமான முந்திரிப் பழம் கவர்ந்திழுக்கிறது. இதனுடைய சுவையின் காரணமாக விலங்குகள் உண்மையான பழத்தை (முந்திரிக் கொட்டை) உண்ணாது விட்டுவிடுகின்றன.

முந்திரி பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

முந்திரி பழத்தில் விட்டமின் பி1(தயாமின்), பி2(ரிபோஃப்ளோவின்), பி3(நியாசின்), விட்டமின் சி (ஆரஞ்சைப் போல் ஐந்து மடங்கு) ஆகியவற்றைப் பெற்றுள்ளது.

இதில் கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்றவை காணப்படுகின்றன. மேலும் இதில் கார்போஹைட்ரேட், புரதம், நீர்ச்சத்து, கரோடீனாய்டுகள், டேனின் முதலியவை உள்ளன.

முந்திரி பழத்தின் மருத்துவப் பண்புகள்

கல்லீரலை சுத்தப்படுத்த

இப்பழமானது கல்லீரல் உட்பட உடலின் எல்லா பாகங்களையும் சுத்தப்படுத்துகிறது. இப்பழத்தின் காரத்தன்மை கல்லீரல் உள்பட உடல் பாகங்களில் உள்ள நச்சுக்கிருமிகளை அழித்து கழிவுகளாக வெளியேற்ற காரணமாகிறது.

அத்துடன் உடலின் பி.எச். அளவினை பராமரிக்கிறது. இப்பழத்தின் தோலில் உள்ள பெக்டின் செரிமானம் சீராக நடைபெற உதவுகிறது.

இதய நலத்தை காக்க

இப்பழமானது இதய நலத்திற்கு தேவையான ஆன்டிஆக்ஸிஜென்டுகள், பாலிபீனால்கள், ஃப்ளவனாய்டுகள் ஆகியவற்றை அதிகளவு கொண்டுள்ளது.

இப்பழத்தில் காணப்படும் அதிகளவு பொட்டாசியம் உயர் இரத்த அழுத்தத்தை சீராக்கி இதயத்தை மாரடைப்பு உள்ளிடவைகளிலிருந்து பாதுகாக்கிறது. எனவே இதய நலத்தை பேணவிரும்புபவர்கள் இப்பழத்தினை உண்ணலாம்.

கொலஸ்ட்ராலின் அளவினைக் குறைக்க

இப்பழத்தினை உண்ணும்போது அவை கொழுப்பினை எரித்து தேவையான ஆற்றலினை வழங்குகின்றன. இப்பழத்தினை உண்டு உடற்பயிற்சி செய்யும்போது அதிகளவு கொழுப்பானது எரிக்கப்படுகிறது. இதனால் கொலஸ்ட்ராலின் அளவு குறைகிறது.

நுரையீரல் செயல்பாட்டினை சீராக்க

இப்பழத்தில் காணப்படும் தனித்துவமான ஃப்ளவனாய்டுகள் நுரையீரலை ஆரோக்கியமாக வைப்பதுடன் அதனை சீராக செயல்பட வைக்கின்றன.

இப்பழத்தின் சாற்றினை முறையாக பயன்படுத்துபவர்கள் ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசப் பிரச்சினைகளிருந்து நிவாரணம் பெறுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே இப்பழத்தினை உண்டு நுரையீரல் செயல்பாட்டினை சீராக்கலாம்.

எலும்புகளின் ஆரோக்கியம் மேம்பட

எலும்புகளின் ஆரோக்கியத்திற்குத் தேவையான பாஸ்பரஸ், கால்சியம், மெக்னீசியம் போன்றவை இப்பழத்தில் காணப்படுகின்றன. எனவே இதனை உண்டு எலும்புகளின் ஆரோக்கியத்தைப் பேணலாம்.

நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்க

இப்பழத்தில் காணப்படும் அதிகளவு விட்டமின் சி-யானது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கிறது. இதனால் பாக்டீரியா மற்றும் வைரஸினால் உண்டாகும் சளி, காய்ச்சல் போன்றவை விரைவில் குணமாவதோடு மீண்டும் வராமல் தடுக்கப்படுகின்றன.

புற்றுநோயினை தடை செய்ய

இப்பழத்தில் காணப்படும் ஃப்ளவனாய்டுகள், பாலிபீனாக்கில்கள் புற்றுச் செல் உருவாவதை தடைசெய்கின்றன. இப்பழத்தினை உண்பதால் நுரையீரல் உள்ளிட்ட இடங்களில் புற்றுநோய் உருவாவது தடுக்கப்படுகிறது.

மலச்சிக்கலினைத் தடுக்க

மலச்சிக்கலானது கழிவில் உள்ள நீர்ச்சத்தினை பெருங்குடல் உறிஞ்சும்போது உண்டாகிறது. இப்பழானது சார்பிட்டால் என்ற வேதிப்பொருளைக் கொண்டுள்ளது.

இப்பொருளானது பெருங்குடலினை அடையும் போது பெருங்குடலுக்குத் தேவையான நீர்ச்சத்தினை வழங்கி மலத்தினை இளக்கி எளிதில் வெளியேற்றுகிறது. இதனால் மலச்சிக்கல் தீரும். எனவே மலச்சிக்கல் வராதிருக்க இப்பழத்தினை உண்ணலாம்.

சருமம் மற்றும் கேச பராமரிப்பிற்கு

இப்பழத்தில் உள்ள விட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிஜென்டுகள் சருமத்தில் உண்டாகும் வீக்கம், அரிப்பு, சுருக்கம் மற்றும் வெடிப்பு ஆகியவற்றைப் போக்குகிறது.

கேசத்தில் இப்பழச்சாற்றினை தேய்க்கும்போது பொடுகு உள்ளிட்ட கேசப்பிரச்சினைகள் தீருகின்றன. சருமம் மற்றும் கேசத்திற்கு பயன்படுத்தும் கிரீம்கள், சாம்புகள் உள்ளிட்டவைகளின் தயாரிப்பில்; இப்பழச்சாறு பயன்படுத்தப்படுகிறது.

முந்திரிப்பழத்தினைப் பற்றிய எச்சரிக்கை

இப்பழமானது அதிகளவு உண்ணும்போது தொண்டையில் அதிகளவு கரகரப்பினை ஏற்படுத்தி புண்களைத் தோற்றுவிக்கும். இதனால் வயிற்றுப்போக்கு, காய்ச்சல் உண்டாகும். இதனால் இப்பழத்தினை அளவோடு உண்ண வேண்டும்.

 

Village Art – Glass Painting

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *