வயிற்று புழுக்களை கொல்லும் கல்யாண முருங்கை

பயன்கள்:

கல்யாண முருங்கை பொதுவாக வயிற்றுப்புழுக்களைக் கொல்லும் பண்பினைக் கொண்டுள்ளது. இலை, சிறுநீர் பெருக்கும்; மலமிளக்கும்; தாய்ப்பால் பெருக்கும்; மாதவிலக்கைத் தூண்டும்; உடல் பலத்தை அதிகரிக்கும். பூக்கள், கருப்பையை சுத்தமாக்கும். பட்டை, கோழையகற்றும்; காய்ச்சல் நீக்கும்; குடற்புழுக்களைக் கொல்லும். விதை, மலமிளக்கும்.

கல்யாண முருங்கை முழுத்தாவரம் காரச்சுவையும், வெப்பத்தன்மையும் கொண்டது. தாவரம் முழுவதும் முட்களைக் கொண்ட, மென்மையான தண்டுக் கட்டையை உடைய மரம். தண்டு, கட்டை ஆகியவை பச்சை நிறமுடையதாகக் காணப்படும். இலைகள் அகன்றவை. பூக்கள் பளிச்சிடும் சிவப்பு நிறமானவை. விதைகள் உருட்டானவை, சிவப்பு நிறமானவை.

முருக்கமரம், கல்யாண முருக்கன், முள்முருக்கு என்கிற மாற்றுப் பெயர்களும் உண்டு. தமிழகமெங்கும் வேலிகளில், பரவலாகக் காணலாம். இலை, விதை, பூ, பட்டை ஆகியவை மருத்துவப் பயனுள்ளவை.

வெற்றிலை, மிளகு முதலிய கொடிவகைத் தாவரங்கள் பயிரிடப்படும் இடங்களில் அவை வளர்வதற்கு ஆதாரமாக கல்யாண முருங்கை மரம் வளர்க்கப்படுகின்றது.

மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்றுவலி குணமாக கல்யாண முருங்கை இலைச்சாறு 30 மி.லி. காலையில், வெறும் வயிற்றில் 10 நாட்கள் குடிக்க வேண்டும் அல்லது இலையிலிருந்து இரசம் தயாரித்து, சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டுவர வேண்டும்.

குடற்புழுக்கள் வெளியாக

குழந்தைகளுக்கு: இலைச்சாறு 10 துளியில், சிறிதளவு வெந்நீர் கலந்து, உள்ளுக்குக் கொடுக்க வேண்டும்.

பெரியவர்களுக்கு : இலைச்சாறு 4 தேக்கரண்டி, சிறிதளவு தேன் கலந்து, உள்ளுக்குச் சாப்பிட வேண்டும். வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் மோர் குடிக்க வேண்டும்.

தாய்மார்களுக்கு பால்சுரப்பு அதிகமாக கல்யாண முருங்கை இலையைத் தேங்காய் எண்ணெயில் சமைத்துச் சாப்பிட வேண்டும்.

கீல்வாயு குணமாக தேவையான அளவு இலைகளை இலேசாக நசுக்கி, வதக்கி, இளஞ்சூடான நிலையில், பாதிக்கப்பட்ட இடத்தில் வைத்துக் கட்ட வேண்டும்.
புண்கள், தோல்நோய்கள் குணமாக பட்டையை நசுக்கி, வெந்நீரில் இட்டுக் கொதிக்க வைத்து, பாதிக்கப்பட்ட இடத்தைக் கழுவ வேண்டும்.

சீதபேதி குணமாக இலைச்சாறு ஒரு தேக்கரண்டி அளவுடன், அதே அளவு விளக்கெண்ணெய் சேர்த்துக் குடிக்க வேண்டும். காலை, மாலை, மூன்று நாட்களுக்கு இவ்வாறு செய்ய வேண்டும்.

கிராம மக்கள், கர்ப்ப காலத்தில் கல்யாண முருங்கை இலைகளை அரிந்து, சிறுபயறுடன் சேர்த்து, வேகவைத்துக் கொடுப்பர். இதனால், கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் சிறுநீர் எரிச்சல் குணமாகி, தாராளமாக சிறுநீர் இறங்கும்.

மேலும், பெண்களுக்குக் குழந்தைப்பேறு உண்டாக, 10 நாட்களுக்கு, கல்யாண முருங்கைப் பூ ஒன்றுடன், 4 மிளகு சேர்த்து, அரைத்து வெறும் வயிற்றில், காலையில் உள்ளுக்கு கொடுக்கிறார்கள்.

Balaji Sandal Dhoop Sticks

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *