தசாவதாரங்கள் வணங்கிய சிவத்தலங்கள்

*காஞ்சிபுரத்தில் திருமால் மீனாக மாறி சிவலிங்கத்தை பூஜை செய்தார். ஆகவே இந்த ஈசன், மச்சேஸ்வரர் எனும் பெயரில் அருள்கிறார்.

* கும்பகோணத்தை அடுத்த தேவராயன்பட்டினம், முன்னாளில் சேலூர் என வழங்கப்பட்டது. சேல் எனில் மீன் என்று பொருள். இத்தல ஈசனை மச்சாவதார மூர்த்தி வழிபட்டதால் இங்கு அருளும் மூர்த்தி மச்சேஸ்வரர் என்று வணங்கப்படுகிறார்.

* மந்தார மலையை ஆமை வடிவில் தாங்க சக்தி பெற திருக்கச்சூரில் எழுந்தருளியுள்ள ஈசனை ஆமைமடு எனும் தீர்த்தத்தை உருவாக்கி திருமால் துதித்ததை, இத்தல விநாயகர் சந்நதி மண்டப விதானத்தில் புடைப்புச் சிற்பமாக
தரிசிக்கலாம்.

* காஞ்சிபுரத்தில் அமுதம் கிடைத்த பின் ஆமை வடிவோடு திருமால் பூஜை செய்த கச்சபேஸ்வரர் திருக்கோயில் புகழ் பெற்றது.

* சென்னை-திருப்போரூர் சாலையில் உள்ள செங்கண்மால் கிராமத்தில் அருளும் செங்கண்மாலீஸ்வரரை ஆதிவராஹ மூர்த்தி வழிபட்டு பேறு பெற்ற நிகழ்வை கருவறை தெற்கு சுவரில் புடைப்புச் சிற்பமாக காணலாம். இத்தல தீர்த்தம் சுவேத வராஹ தீர்த்தம் என்றே புகழ்பெற்றது.

* காஞ்சிபுரத்தின் அருகே உள்ள தாமல் கிராமத்தில் வராஹமூர்த்தி வழிபட்ட வராகேசுவரர் திருவருள் புரிகிறார். அங்கேயே நரசிம்மர் வழிபட்ட ஈசன் நரசிம்மேஸ்வரர் எனும் பெயரில் அருள்கிறார்.

* புதுச்சேரிக்கு அருகிலுள்ள வில்லியனூரில் உள்ள காமீசுவரரை நரசிம்மர் வழிபட்டு வரம் பெற்று அருகில் உள்ள சிங்கிரியில் தனிக்கோயில் கொண்டருள்கிறார்.

* கடலூருக்கு அருகில் உள்ள திருமாணிக்குழி திருத்தலம், வாமன வடிவில் திருமால் ஈசனை பூஜித்து நற்கதி பெற்ற தலமாகும். இத்தல ஈசன் வாமனபுரீஸ்வரர் என்று வணங்கப்படுகிறார்.

* வாமனாவதாரத்தில் அசுரகுருவான சுக்கிரன் வண்டாக மாறியபோது அவர் கண்ணைக் குத்திய பாவம் தீர, திருமாலால் பூஜிக்கப்பட்ட ஈசன் திருமயிலையில் வெள்ளீஸ்வரராக அருள்கிறார்.

* காஞ்சிபுரத்திற்கு அருகே வேகாமங்கலத்தில் பரசுராமர் பூஜித்த ஈசன் பரசுராமேஸ்வரர் எனப்படுகிறார்.

* கும்பகோணத்திற்கு அருகே உள்ள திரிலோக்கி திருத்தலம் பரசுராமரால் வழிபடப்பட்ட பெருமை பெற்றது. அதனால் அத்தலம் பரசுராமேஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது.

* ராமேஸ்வரத்தில் ராமபிரான் பூஜித்த ராமநாதரை தரிசிக்கலாம். பாரதமெங்கும் உள்ள பன்னிரு ஜோதிர்லிங்கங்களுள் இந்த ராமநாத லிங்கமும் ஒன்று.

* திருச்சி மாவட்டம் மணலூர்ப் பேட்டையிலிருந்து 7 கி.மீ. தொலைவிலுள்ள திருப்பைஞ்ஞீலியில் உள்ள சோமாஸ்கந்தமூர்த்தி திருமாலுக்கு சக்கரம் அளித்தமையால் சக்கரத் தியாகர் என வணங்கப்படுகிறார்.

* வேதாரண்யத்தை அடுத்த கோடிக்கரைக் குழகர் கோயிலில் உள்ள ஈசன் பலராமரால் வழிபடப்பட்டவர்.

* காஞ்சிபுரத்தில் கண்ணன் வழிபட்ட சிவத்தலம் கண்ணேசர் எனும் பெயரில் அமைந்துள்ளது.

* கண்ணபிரான் ஈசனை வழிபட்ட தலம் ரைவதகிரியில் உள்ளது. இது வடுககிரி என்றும் அழைக்கப்படுகிறது. கண்ணன் வில்வ இலைகளால் ஈசனை அர்ச்சித்ததால் அந்த ஈசன் வில்வேஸ்வரர் என்றானார்.

* திருமால் சக்ராயுதம் வேண்டி ஈசனை நோக்கி தவம் செய்த தலம் காஞ்சிபுரம் அருகே உள்ள திருமாற்பேறு.

* திருவானைக்காவலில் ராமர் தீர்த்தம் அமைத்து வழிபட்டார். அவர் நிறுவிய லிங்கம் விஷ்ணுவேஸ்வரர் ஆலயம் எனப் போற்றப்படுகிறது.

* திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயத்தில் பெரிய ரங்கநாதரை கோவிந்தராஜர் எனும் பெயரில் தலைமாட்டில் உள்ள சிவலிங்கமூர்த்தியை பூஜை புரியும் நிலையில் தரிசிக்கலாம்.

* மன்னார்குடிக்கு அருகில் உள்ள திருராமேஸ்வரத்தில் ராமர் பூஜித்த ராமலிங்கத்தையும் சீதை பூஜித்த சீதேஸ்வரரையும் தரிசிக்கலாம். தசாவதாரங்களில் ராமாவதாரத்திற்கே மனைவி பெயரில் லிங்கம் நிறுவிய பெருமை கிட்டியது குறிப்பிடத்தக்கது.

 

Visit : tmpooja.com/info

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *