கேதார கௌரி விரதம்

கேதார கௌரி விரதம் என்பது சிவபெருமானை நினைத்து ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படும் முக்கியமான‌ விரதம் ஆகும்.

கேதார கௌரி விரதம் மேற்கொண்டே பார்வதி தேவி சிவபெருமானின் இடப்பாகத்தைப் பெற்றார். அதனால் இறைவன் அர்த்தநாதீஸ்வரர் ஆனார் என்று கூறப்படுகிறது.

இது ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாத வளர்பிறையான தசமி (விஜய தசமி) முதல் ஐப்பசி மாதம் தீபாவளி அமாவாசை வரை மொத்தம் 21 நாட்கள் கடைப்பிடிக்கப்படுகின்றது.

இவ்விரத்தினை ஆண்கள், பெண்கள் என்ற வேறுபாடின்றி எல்லோரும், எல்லா வயதினரும் கடைப்பிடிக்கின்றனர்.

இவ்விரதத்தின் போது இறைவனுக்கு பிரசாதமாக அதிரசம் எனப்படும் பச்சரிசி மாவு, வெல்லம் கலந்து தயாரிக்கப்படும் பதார்த்தம் பிரதானமாகப் படைக்கப்படுகிறது.

வழிபாட்டின்போது நோன்புக் கயிறு வைத்து வழிபட்டு இறுதியில் நோன்பிருக்கும் எல்லோருடைய கைகளிலும் அணியப்படுகிறது. இவ்வழிபாடு வீடுகளிலும், கோவில்களிலும் மேற்கொள்ளப்படுகிறது.

வழிபாட்டின்போது உணவருந்தாமல் விரத முறை பின்பற்றப்படுகிறது. இவ்விரத முறையை மேற்கொள்வதால் கணவன் மனைவி ஒற்றுமையுடன் வளமையான வாழ்க்கை வாழ்வார்கள் என்றும், நற்புத்திரப்பேற்றுடன் இணைபிரியாத சுக வாழ்வு கிடைக்கும் என்றும், நல்ல எண்ணங்கள் ஈடேறும் என்றும் கருதப்படுகிறது.

கேதார கௌரி விரதம் பெயர் காரணம்

கேதாரம் என்ற சொல்லுக்கு இமயமலைப் பகுதியைச் சார்ந்த வயல் பகுதி என்பது பொருளாகும்.

கௌரி எனப் போற்றப்படும் பார்வதி அம்மை கேதாரப் பகுதியில் எழுந்தருளிழுள்ள சிவபெருமானை நினைத்து மேற்கொண்ட விரதமாயின் இது கேதார கௌரி விரதம் என அழைக்கப்படுகிறது.

இவ்விரத முறையினைப் பின்பற்றி உமாதேவியார் சிவனுடன் ஐக்கியமானார் என்பதே இதன் சிறப்பாகும். இவ்விரதம் கௌரி நோன்பு, அம்மன் விரதம், கௌரி காப்பு நோன்பு, நோன்பு என பல பெயர்களில் வழங்கப்படுகிறது.

கேதார கௌரி விரதம் கதை

முன்னொரு சமயம் பிருங்கி முனிவர் என்ற ஒரு சிவபக்தன் இருந்தார். அவர் ஒரு சமயம் திருக்கயிலை சென்றார். அங்கு சிவபெருமான் உமாதேவியுடன் தேவ சபையில் வீற்றிருந்தார்.

அம்மையப்பரைக் காண மகாவிஷ்ணு, பிரம்மா ஆகியோர் தத்தம் தேவியருடனும், தேவேந்திரன், தேவர்கள், கந்தவர்கள், சிவனடியார்கள் என எல்லோரும் வந்திருந்தனர்.

எல்லோரும் அம்மையப்பரை வலம் வந்து வணங்கினர். பிருங்கி முனிவர் மட்டும் வண்டு உருவம் எடுத்து சிவனை மட்டும் வலம் வந்தார்.

அதனைக் கண்ட உமாதேவி சிவபெருமானிடம் “ஐயனே ஏன் பிருங்கி தங்களை மட்டும் வண்டு உருவம் கொண்டு வலம் வந்தார்?” என்று வினவினார்.

அதற்கு சிவபெருமான் “தேவி பிருங்கி பரமபதத்தை வேண்டுபவன். உலக சுகத்தை வேண்டுபவன் அல்ல. அதனால் பரமபதத்தை அருளும் என்னை மட்டும் வலம் வந்தான். இதில் தவறேதும் இல்லை.” என்று கூறினார்.

அதனால் கோபம் கொண்ட பார்வதி தேவி தனது அம்சமான சக்தியை பிருங்கியிடம் இருந்து எடுத்துவிட்டார். இதனால் பிருங்கி முனிவர் நிற்க முடியாமல் தடுமாறினார்.

அதனைக் கண்ட சிவபெருமான் பிருங்கிக்கு கோல் ஒன்றைக் கொடுத்தார். அதனைப் பிடித்துக் கொண்ட பிருங்கி முனிவர் மீண்டும் சிவபெருமானை மட்டும் வணங்கிவிட்டுச் சென்றார். இச்செயலால் கோபம் கொண்ட பார்வதி தேவி கயிலையை விட்டு அகன்றார்.

கௌதம முனிவரின் ஆசிரமத்திற்குச் சென்றார். பார்வதி தேவியின் வரவால் 12 ஆண்டுகள் வறட்சியிலிருந்த முனிவரின் ஆசிரமம் செழிப்படைந்தது.

செழிப்பினைக் கண்ட முனிவர் செழிப்பிற்கு காரணம் பார்வதி தேவியின் வரவுதான் என்பதனை உணர்ந்து பார்வதி தேவியை வரவேற்றார். அங்கு சில காலம் தங்கிய பார்வதி தேவி சிவபெருமானை விட்டு நீங்கியதற்காக வருந்தினார்.

மீண்டும் சிவனை அடையவும் எப்பொழுதும் சிவத்துடன் இணைந்து இருப்பதற்கான வழியைக் கூறுமாறும் கௌத முனிவரை வினவினார். அப்பொழுது கௌதமர் புரட்டாசி வளர்பிறை தசமியிலிருந்து ஐப்பசி அமாவாசை வரை மொத்தம் 21 நாட்கள் சிவனை நினைத்து நோன்பிருக்க வேண்டும்.

வழிபாட்டில் இறைவனுக்கு அதிரசம், அப்பம், வடை, சர்க்கரைப்பொங்கல், புளியோதரை ஆகியவற்றைப் படைத்து தீப தூபம் காட்டி மனதால் சிவனை நினைத்து வழிபாடு மேற்கொள்ள வேண்டும்.

விரத நாட்களில் பிரசாதமாகப் படைத்த அதிரசத்தை மட்டும் உண்டு விரதம் மேற்கொள்ள வேண்டும். விரதத்தின் முடிவில் இறைவன் தோன்றி விரும்பியதைத் தருவார் என்று கூறினார்.

அம்மையும் சிரத்தையுடன் பயபக்தியாக இவ்விரதத்தைக் கடைப்பிடித்தார். விரதத்தின் முடிவில் சிவபெருமான் தோன்றி அம்மையின் விருப்பத்தைக் கேட்டார்.

அதற்கு அம்மை “தங்களை ஒருபோதும் பிரியாது இருக்க வேண்டும்” என்று கேட்டார்.

அதற்கு இறைவனார் “தேவி யாம் உமக்கு எமது உடலின் இடப்பாகத்தை அருளினோம். இன்று முதல் சக்தியானது சிவத்துடன் கலந்து சிவசக்தியாகும். இனி உன்னை யாராலும் என்னிடமிருந்து பிரித்துப் பார்க்க இயலாது” என்று கூறி தேவியின் மன வருத்தத்தைப் போக்கினார். பின் தனது உடலின் இடப்பாகத்தை அம்மைக்கு அளித்து அர்த்தநாதீஸ்வரர் ஆனார்.

அப்போது அம்மை “ஐயனே இவ்விரதத்தை கடைபிடிக்கும் எல்லோருக்கும் சகல நன்மைகளுடன் ஐஸ்வர்யத்தையும் தரவேண்டும்.

கணவன் மனைவி ஒற்றுமைக்கு இந்நிகழ்வு எடுத்துக்காட்டாகவும், உலகில் ஆணும் பெண்ணும் சமம் என்பதை எல்லோரும் உணரவும் இந்நிகழ்வு உதாரணமாகவும் திகழ வேண்டும்” என்று வேண்டினார். சிவபெருமானும் அவ்வாறே அருளினார்.

விரதம் கடைப்பிடிக்கும் முறை

இவ்விரத முறையில் வழிபாடானது வீடுகளிலோ அல்லது கோவில்களிலோ மேற்கொள்ளப்படுகிறது. மொத்தம் 21 நாட்கள் இவ்விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.

முதலில் கலசத்தில் தேங்காய் வைத்து கும்பம் தயார் செய்யப்படுகிறது. பின் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைக்கப்படுகிறார்.

வழிபாட்டில் பூக்கள், அதிரசம், அப்பம், சர்க்கரைப்பொங்கல், புளிசாதம், நோன்புக் கயிறு ஆகியவை படைக்கப்படுகின்றன. நோன்புக் கயிறானது 21 இழைகளால் பின்னப்பட்டுள்ளது.

முதலில் விநாயகருக்கு தீப தூபம் காட்டி வணங்கப்படுகிறது. பின் கும்பத்தில் அம்மையப்பரை ஆகவாகனம் செய்து தீப தூபம் காட்டி சிவன் மற்றும் சக்திக்கான பாடல்கள் பாடப்பட்டு வழிபாடு மேற்கொள்ளப்படுகின்றது.

வழிபாட்டின் ஒவ்வொரு நாளும் நோன்பு கயிற்றில் முடிச்சு ஒன்று போடப்படுகிறது. விரத நாட்களில் பகலில் உணவு உண்ணாமல் இரவில் படையலிடப்பட்ட அதிரசம் மட்டும் உட்கொள்ளப்படுகிறது.

இவ்வாறாக 21 நாட்கள் விரதம் பின்பற்றபடுகிறது. 21-ம் நாளான அமாவாசை அன்று முழுவதும் உணவு உண்ணாமல் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.

அன்றைய தினம் பிரதோச வேளைக்கு பின் நோன்புக் கயிறு கட்டப்படுகிறது. நோன்புக் கயிறு முழங்கைக்கும் தோளுக்கும் இடைப்பட்டப்பகுதியில் அணியப்படுகிறது.

ஆண்கள் வலது கையிலும் பெண்கள் இடது கையிலும் நோன்புக் கயிற்றினை அணிகின்றனர். முந்தைய வருடம் கட்டப்பட்ட நோன்புக் கயிறு   பூஜையின் மறுநாள்  நீர்நிலைகளில் விடப்படுகிறது.

தற்போது இவ்விரதம் 9 அல்லது 7 அல்லது 5 அல்லது 3 நாட்கள் அல்லது அமாவாசை அன்று மட்டும் கடைப்பிடிக்கப்படுகிறது.

இவ்விரத மகிமை

இவ்விரதத்தைப் பின்பற்றியே மகாவிஷ்ணு வைகுண்டத்தைப் பெற்றார் எனவும், பிரம்ம தேவன் படைப்புத் தொழிலை பெற்றார் எனவும், தேவேந்திரன் பொன்னுலகை ஆண்டு வெள்ளை யானையை பெற்றார் எனவும் கருதப்படுகிறது.

திருமணமான பெண்கள் கணவரின் தீர்க்க ஆயுள் வேண்டியும், தம்பதி ஒற்றுமைக்காகவும் குடும்ப சுபிட்சம் வேண்டியும் இவ்விரத முறையினை மேற்கொள்கின்றனர். கன்னிப்பெண்கள் நல்ல கணவர், நிறைந்த திருமண வாழ்க்கை, நற்புத்திரர்கள் வேண்டி இவ்விரத முறையினை மேற்கொள்கின்றனர்.

இவ்விரதத்தினால் கணவன் மனைவி ஒற்றுமை, நல்ல வளமான திருமண வாழ்க்கை நற்புத்திரர்கள், நல்ல எண்ணங்கள் ஈடேறுதல் ஆகியவை ஏற்படுவதாகக் கருதப்படுகிறது.

நாமும் இவ்விரத முறையை மேற்கொண்டு குடும்ப ஒற்றுமையுடன் இறையருளால் இம்மை மறுமைகளில் சுக வாழ்வு வாழ்வோம்.

 

Vasthu Boomi Pooja Kit

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *