ஆலயம் சென்று வழிபாடு செய்பவர்கள் செய்ய வேண்டியதும், செய்யக் கூடாததும்

விளக்கங்கள்:
*ஆலயத்துக்கு செல்லும் போது நீராடி, தூய ஆடை அணிந்து செல்ல வேண்டும். ஆலய கோபுரத்தை கண்டதும் கை கூப்பி வணங்க வேண்டும். அப்படி செய்வதால் தெய்வத்தின் காலடியை தொட்டு கும்பிடுவதாக நம்பிக்கை. கோபுர தரிசனம் பாவ விமோசனம் என்று சொல்லப்படுகிறது. பிறகு தல விநாயகரை வணங்கி உள்ளே செல்ல வேண்டும்.

*கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றை வழிபட வேண்டும். இதைத் தொடர்ந்து துவார பாலகர்களை வழிபட்டு கருவறை முன்புள்ள விநாயகரை வணங்க வேண்டும்.

*பிறகு கருவறையில் இறைவனை கண்ணார கண்டு, மனதில் இருத்தி வழிபட வேண்டும். அர்ச்சகர் தரும் திருநீறை கீழே சிந்தாமல் நெற்றியில் பூசுதல் வேண்டும். கருவறையை 3 தடவை வலம் வந்து வழிபடுதல் வேண்டும். சிவபுராணத்தை அல்லது இறைவன் திருநாமத்தை உச்சரித்தப்படி வலம் வருவது நல்லது.

*முதல் முறை வலம் வரும் போது அம்பாள் சன்னதி, உற்சவர், நடராஜரை வழிபட வேண்டும். இரண்டாம் தடவை வலம் வரும்போது, முருகன், நவக்கிரகம், பைரவர், அறுபத்து மூவரை வழிபட வேண்டும். மூன்றாம் முறை வலம் வரும்போது தெட்சிணாமூர்த்தி, துர்க்கை, சண்டீகேசுவரரை வழிபட வேண்டும்.

*சண்டீகேசுவரரை வழிபாடு செய்ததும் ஆலய வழிபாடு முழுமை பெறுவதாக அர்த்தம். இதையடுத்து மீண்டும் கொடி மரம் அருகில் விழுந்து வணங்கி, சிறிது நேரம் வடக்கு முகமாக அமர்ந்து விட்டு வீடு திரும்ப வேண்டும்.

*அவசர அவசரமாகவோ, கோபமாகவோ பூஜை செய்வதோ, ஆலயம் செல்வதோ கூடாது. குளித்து, தூய உடை அணியாமலும், நெற்றிக்கு இட்டுக் கொள்ளாமலும் கோவிலுக்குச் செல்லக்கூடாது. காலை சுத்தம் செய்யாமல் கோவிலுக்குச் செல்லக்கூடாது.ஈர உடையுடனோ அல்லது தூய்மைக் குறைவான உடையுடனோ கோவிலுக்குச் செல்லக்கூடாது.

*அசைவ உணவு சாப்பிட்டு விட்டு கோவிலுக்குச் செல்லக்கூடாது. கோவிலுக்குள் வலம் வரும்போது வேக வேகமாக வலம் வரக்கூடாது. நிறை மாத கர்ப்பிணிப் பெண் தலையில் எண்ணெய் குடத்துடன் நடந்தால் எப்படி நடப்பாளோ அப்படி நடக்க வேண்டும். தாம்பூலம் தரித்துக் கொண்டு கோவிலுக்குச் செல்லக்கூடாது.

*சட்டை அணிந்து கொண்டோ அல்லது போர்த்திக் கொண்டோ செல்லக்கூடாது. சட்டை அணியாமல் சென்றால், இறைவனின் ஈர்ப்பு அலைகளை நம் உடம்பு முழுமையாக பெற முடியும்.

*கோவிலில் உள்ள விளக்குகளைக் கையால் தூண்டவோ, தூண்டிய கையில் உள்ள எண்ணை கறையை சுவரில் துடைக்கவோ கூடாது. சிலைகளைத் தொடுவதோ அல்லது சிலைகளின் திருவடிகளில் கற்பூரம் ஏற்றவதோ கூடாது. இறைவனுக்கு நைவேத்தியம் ஆகும்போது பார்க்கக்கூடாது.

*விபூதி, சந்தனம், அபிஷேகம் தவிர சுவாமிக்கு இதர திருமஞ்சனம் ஆகும்போது பார்க்கக்கூடாது. கோவிலின் உள்ளேயோ, மதில் சுவர்களிலோ எச்சில் துப்புதல் கூடாது. கோவிலின் உள்ளே சண்டை போடுதல், தலை வாரி முடித்தல், சூதாடுதல், சிரித்தல், காலை நீட்டிப் படுத்துக் கொள்ளுதல் கூடாது. சுவாமிக்கும் நந்திக்கும் குறுக்கே போகக்கூடாது. சிவ நிர்மால்யங்களைத் தூண்டுதல், மிதித்தல் கூடாது. கோபுரம், கொடிமரம், பலிபீடம், விக்கிரகம் ஆகியவற்றின் நிழலை மிதிக்கக்கூடாது.

*கோவிலுக்கு தேங்காய், வெற்றிலை, பாக்கு கொண்டு செல்ல வேண்டும். பிறர் பொருளைக் கொண்டு இறைவனுக்கு நைவேத்தியம் செய்யக்கூடாது. வீட்டில் தினமும் செய்யும் வழிபாட்டை செய்யாமல் நிறுத்தி விட்டு கோவிலுக்கு செல்லக்கூடாது. பிறர் வீட்டில் சாப்பிட்ட அன்று கோவிலுக்குச் செல்வது தவறு.

*மரணத்தீட்டு உள்ளவர்களை தொட்டபின் குளிக்காமல் கோவிலுக்குச் செல்லக்கூடாது. கருப்பு வண்ண உடை அணிந்து கோவிலுக்குச் செல்லக்கூடாது. அர்ச்சகரிடம் இருந்து வாங்கி திருநீறு பூசிக் கொள்ளும் போது, சிவ, சிவ என்று உச்சரித்தப்படி பூச வேண்டும். ஒரு கையால் திருநீறு, குங்குமம் வாங்குதல் கூடாது. விபூதி, குங்குமம் பெறும் முன்பே அர்ச்சருக்கு தட்சனை கொடுத்து விட வேண்டும்.
*சண்டிகேசுவரர் சிவ சிந்தனையில் இருப்பவர். எனவே அவர் முன் நின்று கை தட்டுவது, சொடுக்கு போடுவது கூடாது. அவர் மீது நூலினை போடுவதும், விபூதி, குங்குமத்தை போடுவதும் அபசாரம் ஆகும்.

*இறைவனுக்கு சாத்தப்பட்ட திருநீறு, வில்வம், மலர்களை மிதித்து விடக்கூடாது. ஆலயத்துக்குள் யார் காலிலும் விழுந்து வணங்க கூடாது. ஆலய வழிபாட்டுக்கு குடும்பத்தோடு சென்று வருவது நல்லது. பரிகார தலத்துக்கு சென்றால் வேறு யார் வீட்டுக்கும் செல்லாமல் வீடு திரும்ப வேண்டும். யாரிடமும் கடன் வாங்கி ஆலயத்துக்கு செல்லாதீர்கள்.

*எந்த ஒரு ஆலயத்துக்கு செல்லும் முன்பும் குல தெய்வ வழிபாட்டை அவசியம் செய்ய வேண்டும். முக்கிய பூஜைகளை நல்ல நேரம், திதி, ஹோரை பார்த்து செய்வது நல்லது. பொழுது போக்கை மனதில் வைத்துக் கொண்டு ஒரு போதும் ஆலயத்துக்கு செல்லாதீர்கள். ஆலயங்களுக்கு செல்வதற்கு முன் 1 நாளும் பின் ஒரு நாளும் இறந்தவர் வீட்டுக்கு செல்லாதீர்கள்.

*பிரகாரத்தை வலம் வரும்போது அந்தந்த இறை சன்னதிக்கு ஏற்ப சுற்றி வழிபடுங்கள். திரை போட்ட பிறகு பிரதட்சணம் வேண்டாம்.
சுவாமி சன்னதியில் ஸ்தோத்திரம் சொல்லும் போது, மற்றவர்களின் அமைதி கெடாதபடி மனதுக்குள் உச்சரிக்க வேண்டும்.
*நிறைய வேண்டுதல்களை சொல்லாதீர்கள். மற்றவர்களை கெடுக்கும் நோக்கத்துடன் இறைவனிடம் வேண்டாதீர்கள். முழுமையான மன அமைதியுடன் வழிபாடு செய்வது நல்லது.

*மூலவருக்கு தீபாராதனை நடக்கும் போது கண்ணை மூடி வணங்காதீர்கள். இறைவனை கண் குளிர தரிசித்து வழிபடுங்கள். காலையில் விஷ்ணுவையும் மாலையில் சிவனையும் வழிபடுவது நல்லது.

*கோவில் விளக்குகளில் எண்ணை ஊற்றி எரிய வைத்தல், புதிய விளக்குகளை ஏற்றி வைத்தல், சிறியதாக எரியும் விளக்கு திரிகளை சரி செய்து எரிய தூண்டுவது புண்ணிய காரியமாக கருதப்படுகிறது. ஆலயத்தின் பிரதான வாயில் தவிர மற்ற வாயிலில் கோவிலுக்குள்ளே செல்லக்கூடாது. கோவில் கதவுகள் மூடப்பட்டிருக்கும் போது தெய்வத்தை வணங்கக் கூடாது. இரு சக்கர வாகனங்களில் மற்றும் காரில் பயணம் செய்யும் போது கோவிலுக்கு உள்ளே செல்லாமல் வெளியே இருந்து தெய்வத்தை கும்பிடுவது உகந்ததல்ல. இம்மாதிரியான செய்கை தெய்வத்தை அவமதிப்பதாகும்.

*சிவன் கோவிலில் முதலில் சிவனை வழிபட்ட பிறகே சக்தியை வழிபட வேண்டும். விஷ்ணு கோவிலுக்குச் சென்றால் முதலில் மகாலட்சுமியை வழிபட்ட பிறகே விஷ்ணுவை வணங்க வேண்டும். விஷ்ணுவை வழிபடும் போது முதலில் பாதத்தை பார்த்து படிப்படியாக முகம் வரை பார்த்து வணங்க வேண்டும். மகாலட்சுமியை வணங்கும் போது முதலில் கண்களை பார்த்து படிப்படியாக பாதம் வரை பார்த்து வழிபாடு செய்தல் வேண்டும்.

*ஆலயத்தில் இருந்து வீட்டுக்கு புறப்படும் போது சற்று அமர்ந்து செல்ல வேண்டும். ஏனெனில் சிவாலயங்களில் 7 சிரஞ்சீவிகள் தங்கி இருந்து சிவதரிசனம் செய்பவர்களை அவர்கள் வீடு வரை பின்தொடர்ந்து வந்து மரியாதை செய்வதாக சொல்வார்கள்.
எனவே அவர்களை வணங்கி, நீங்கள் இருங்கள். நாங்கள் சென்று வருகிறோம் என்று விடைபெற வேண்டும். இவ்வாறு முறைப்படி ஆலய தரிசனம் செய்தால் முழுப்பயனையும் பெறமுடியும்.

*ஆலய வழிபாட்டின் ஒவ்வொரு அம்சமும் நம் வாழ்வியல் நெறிமுறைகளுடன் தொடர்புடையது.

God design Embroidery Hanging mat- Wall Decorator

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *