மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?

சத்குரு:

காரண அறிவு மந்திரங்கள் என்றாலே சந்தேகக் கண்ணோடு பார்க்கிறது. ‘வெறும் ஒரு சத்தம் என்னை எந்தவிதத்தில் மாற்றிவிடும்?’ என்று அது கேட்கிறது. அனைத்து மந்திரங்களுமே உச்சகட்ட விடுதலையை அடைவதற்காக உச்சரிக்கப்படுவதில்லை. வேண்டிய செல்வங்களை அடைவதற்காகவும், எதிர்மறைத் தன்மையைப் போக்குவதற்கும் கூட பல மந்திரங்கள் இருக்கின்றன.

தினசரி விஷயங்களை இது போன்ற மந்திரங்கள் மூலம் நாம் திறம்பட கையாள முடியும். வெகு சில மந்திரங்கள்தான் ஆன்மீகம் காட்டும் நல்வாழ்வை நோக்கி உங்களை இட்டுச் செல்லும். எந்த ஒரு மந்திரமோ, அல்லது கடவுளோ அல்லது மதமோ, உங்களுக்குள் பேராசையை அல்லது உங்கள் பயத்தை அல்லது எல்லைகளை உருவாக்கினால், அவற்றுக்கு எந்த ஒரு முக்கியத்துவமும் இல்லை. ஒருவேளை உங்களது உடனடித் தேவைகள் மட்டும் அவற்றால் தீரலாம், ஏனென்றால் நீங்கள் அந்த மந்திரத்தின் மூலம் உங்கள் பக்கத்து வீட்டுக்காரரை அழித்துவிடவோ அல்லது உங்களுக்குத் தேவையான பணத்தை சம்பாதித்து கொள்ளவோ முடியும். மந்திரங்கள் ஜெபிப்பவர்களைப் பார்த்து ஏன் சிலர் கேலியும், கிண்டலும் செய்கிறார்கள்? ஒரு ஞானயோகி தன்னைப் புரிந்து கொள்ள தன் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்துகிறார்.

பொதுவாக ஞானயோகிகளுக்கு யோகத்தின் வேறு அமைப்புகள் மீது எந்தவிதமான மரியாதையும் இருக்காது. ஞானத்தைத் தவிர மற்ற அனைத்துமே முட்டாள்தனமானது என்று அவர்கள் நினைக்கிறார்கள். அவர்கள் பக்தர்களைப் பார்த்து சிரிக்கிறார்கள்; கிரியா யோகிகளையும், கர்ம யோகிகளையும் பார்த்து நையாண்டி செய்கிறார்கள். ஒருமுறை ஒரு ஞானயோகி சிவனிடம் சென்று, “உங்கள் பக்தர்கள் மந்திரங்களை ஜெபித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் இந்த உலகத்தில் ஒலி மாசுபாடுதான் அதிகரிக்கிறது. ஒருவர் தான் இருக்கும் நிலையைத் தாண்டி மற்றொரு பரிமாணத்திற்கு செல்ல வேண்டுமென்றால், அனைத்தையும் கடந்து பார்க்கக் கூடிய விழிப்புணர்வு அவருக்கு இருக்க வேண்டும். வெறும் மந்திரங்களை மட்டுமே ஜெபிப்பதால் அவர்களால் எங்கு செல்ல முடியும் என்று நினைக்கிறீர்கள்? அவர்களை இந்தப் பைத்தியக்காரத்தனத்தை நிறுத்தச் சொல்கிறீர்களா?” என்றார். அதற்கு சிவன் தரையில் ஊறிக் கொண்டிருந்த ஒரு புழுவைக் காட்டி, “அந்தப் புழுவுக்குப் பக்கத்தில் போய் ‘சிவ ஷம்போ’ என்று சொல்லுங்கள்” என்றார்.

அந்த ஞானயோகி நம்பிக்கை இல்லாமல் தன் தலையை ஆட்டிக் கொண்டே, புழுவுக்கு அருகில் சென்று சிவ ஷம்போ என்று உச்சரித்தார். உடனே அந்தப் புழு இறந்துபோனது. அதிர்ச்சியடைந்தார் ஞானயோகி. “என்ன இது? நான் மந்திரத்தைச் சொன்னவுடன், அந்தப் புழு இறந்துவிட்டதே,” என்றார். அதற்கு சிவா சிரித்துக் கொண்டே, ஒரு பட்டாம்பூச்சியைக் காட்டி, “அந்த பட்டாம்பூச்சி மீது கவனம் செலுத்திக் கொண்டே சிவ ஷம்போ என்று சொல்லுங்கள்” என்றார். ஞானயோகி, “முடியாது. நான் அந்தப் பட்டாம்பூச்சியைக் கொல்ல விரும்பவில்லை,” என்றார். அதற்கு சிவா, “முயற்சித்துத்தான் பாருங்களேன்,” என்றார். பட்டாம்பூச்சியைப் பார்த்து சிவ ஷம்போ என்றார் ஞானயோகி, அந்த பட்டாம்பூச்சியும் இறந்தது. அதிர்ச்சியுற்ற ஞானயோகி, “இந்த மந்திரம் ஒருவரைக் கொல்லத்தான் செய்கிறதென்றால், ஏன் ஒருவர் இதை உச்சரிக்க வேண்டும்?” என்று கேட்டார்.

அதற்கு சிவா புன்னகைத்துக் கொண்டே, அருகில் மேய்ந்து கொண்டிருந்த ஒரு புள்ளிமானைக் காட்டி, “அந்த புள்ளிமானைப் பார்த்து, சிவ ஷம்போ என்று சொல்லுங்கள்” என்றார். ஞானயோகி, “முடியாது. நான் மானைக் கொல்ல விரும்பவில்லை” என்றார். அதற்கு சிவா, “அதெல்லாம் ஒரு பிரச்சனையும் வராது. மந்திரத்தைச் சொல்லுங்கள்” என்றார். ஞானயோகியும் சிவ ஷம்போ என்று சொன்னவுடன், மான் இறந்து விழுந்தது. வாயடைத்துப் போன ஞானயோகி, “இந்த மந்திரத்தின் பயன்தான் என்ன? இது அனைவரையும் கொல்வதற்காகத்தான் இருக்கிறது,” என்றார். அப்போது ஒரு தாய் தனக்குப் புதிதாகப் பிறந்த ஒரு பச்சிளம் குழந்தையுடன் சிவனின் அருள் பெறுவதற்காக அங்கே வந்தார். சிவா ஞானயோகியைப் பார்த்து, “இந்தக் குழந்தையைப் பார்த்து அந்த மந்திரத்தைச் சொல்லுங்கள்” என்றார். அதற்கு ஞானயோகி, “முடியாது.

நான் இந்தக் குழந்தையைக் கொல்ல விரும்பவில்லை” என்று மறுத்தார். சிவா அவரை சொல்லுமாறு வற்புறுத்தவே, ஞானயோகி மிகுந்த தயக்கத்துடன் அந்தக் குழந்தையை அணுகி, சிவ ஷம்போ என்றார். உடனே அந்தக் குழந்தை எழுந்து உட்கார்ந்து பேச ஆரம்பித்தது. அது, “நான் வெறும் ஒரு புழுவாகத்தான் இருந்தேன். நீங்கள் சொன்ன ஒரு மந்திரத்தால் பட்டாம்பூச்சியாக மாறினேன். இன்னொரு மந்திரத்தால் நீங்கள் என்னை ஒரு மானாக மாற்றினீர்கள். மேலும் ஒரு மந்திரத்தால் ஒரு மனிதனாகவும் மாற்றிவிட்டீர்கள். தயவு செய்து இன்னும் ஒரே ஒரு முறை நீங்கள் அந்த மந்திரத்தை உச்சரியுங்கள்; நான் தெய்வீகத் தன்மையை அடைய விரும்புகிறேன்,” என்றது. இந்தப் பிரபஞ்சம் முழுவதுமே சக்திகளின் அதிர்வுகள்தான் என்று நவீன விஞ்ஞானம் தெள்ளத் தெளிவாக நிரூபித்துவிட்டது. எங்கு ஒரு அதிர்வு இருக்கிறதோ, அங்கு ஒரு ஒலியும் இருக்கவேண்டும்.

அதனால்தான் நாம் யோகாவில், இந்தப் பிரபஞ்சம் முழுவதும் ஒரே ஒரு ஒலிதான் என்று சொல்கிறோம். அது நாதப்பிரம்மம் என்று அழைக்கப்படுகிறது. அதாவது ஒலியின் சிக்கலான கலவைகள் நிறைந்த முழுமையான படைப்பு. இந்த சிக்கலான ஒலிக் கலவைக்குள் சில ஒலிகள் மட்டும் முக்கியமான ஒலிகளாக இருக்கின்றன. இந்த முக்கியமான ஒலிகள்தான் மந்திரங்கள் என்று சொல்லப்படுகின்றன. உங்கள் வாழ்க்கை முழுக்க நீங்கள் ஒரே அறையில் அடைபட்டுக் கிடக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். திடீரென்று அந்தக் கதவுக்கான சாவி உங்கள் கைகளில் கிடைத்தால்? சாவி கிடைத்த மாத்திரத்தில் அதை பிரயோகப்படுத்துவது எப்படி என்றும் உங்களுக்கு பிடிபட்டு போனால்? சிறிய அறையில் அடைபட்டுக் கிடந்த உங்களுக்கு புதிய உலகிற்கான கதவல்லவா திறக்கும்! அந்த சாவியை எங்கு போட்டு எப்படி திருகுவது என்று தெரியாமல், தரையிலும், கூரையிலும் போட்டு திருகிக் கொண்டிருந்தால், நீங்கள் எங்குதான் செல்ல முடியும்? சாவி, உலோகத்தால் ஆன ஒரு சிறிய பொருள்தான், ஆனால் அதை சரியாக பயன்படுத்த தெரிந்தால், அது உங்களுக்கு ஒரு புதிய உலகத்தையே திறந்து காட்டும். நீங்கள் அதுவரை கண்டிராத புதிய பிரபஞ்சமாக இருக்கும்.

tm-pooja-mantra-marketed-by-kalpatharu-inc-divine (4)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *