ஏன் தரையில் கைகளை ஊன்றி சாப்பிடக்கூடாது-ன்னு சொல்றாங்க தெரியுமா?

சாப்பிடும் போது தண்ணீரை அதிகம் குடிக்கக்கூடாது என்று கூறுவார்கள். அப்படி குடித்தால், தாகத்திற்கு சிறிது குடிக்கலாம். அதிகம் குடித்தால் உணவை செரிக்க உதவும் அமிலத்தின் திறன் குறைந்து, உணவுகள் சரியாக செரிமானமாகாமல் போகும். வேண்டுமானால் உணவு உண்பதற்கு 30 நிமிடத்திற்கு முன் மற்றும் உணவு உட்கொண்ட 30 நிமிடத்திற்கு பின் வேண்டிய அளவு தண்ணீரைக் குடிக்கலாம்

உணவை உட்கொள்ளும் போது தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டோ, மொபைல் போன் அல்லது டிவி ரிமோட்டைப் பயன்படுத்திக் கொண்டோ சாப்பிடக்கூடாது. இதனால் உண்ணும் உணவில் கவனத்தை செலுத்த முடியாமல் போவதோடு, அவைகளில் ஏராளமான கிருமிகளும் இருக்கும். இதனால் உடல் உபாதைகளுக்கு உள்ளாகக்கூடும்

சாப்பிடும் போது புத்தகங்களைப் படித்துக் கொண்டோ, பேசிக் கொண்டோ, எழுதிக் கொண்டோ உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இதனால் எவ்வளவு உணவு உட்கொண்டோம் என்பது தெரியாமல் போவதோடு, அளவுக்கு அதிகமாகவும் சாப்பிடக்கூடும். இதன் விளைவாக உடல் பருமன் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது

சாப்பிடும் போது நின்று கொண்டோ அல்லது நடந்து கொண்டோ சாப்பிடும் பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும். அதேப் போல் தவறான நிலையில் அமர்ந்து உட்கொள்வதையும் தவிர்க்க வேண்டும். இதனால் உண்ணும் உணவுகள் வேகமாக செரிமானமாகிவிடும். இதன் விளைவாக அதிகமாக சாப்பிட வேண்டிய நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.

முக்கியமாக சாப்பிடும் போது கைகளை தரையில் ஊன்றி சாப்பிடக்கூடாது, அப்படி சாப்பிட்டால் உண்ணும் உணவு உடலில் ஒட்டாது என்று கூறுவார்கள். இதற்கு காரணம் சாப்பிடும் போது கைகளை ஊன்றி சாப்பிடும் போது, வயிறு சுருங்கி விரைவில் வயிறு நிரம்பியது போன்று இருக்கும். ஆனால் விரைவில் பசி எடுத்துவிடும். இதன் விளைவாக உடல் பருமன் அடையக்கூடும்.

உணவு உட்கொள்ளும் போது கண்ட விஷயங்களை நினைத்துக் கொண்டு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், நாம் எவ்வளவு உணவு உட்கொள்கிறோம் என்பது தெரியாமல் அதிகளவு உணவை உட்கொள்ள நேர்ந்து, அதுவே உடல் எடை அதிகரிக்க வழிவகுத்துவிடும்.

சாப்பிடும் போது மேற்கொள்ள வேண்டிய சில பழக்கங்கள்!

நம் முன்னோர்கள் தரையில் அமர்ந்து கால்களை மடக்கி உட்கொள்வதே நல்லது என்று கூறுவார்கள். இதற்கு காரணம் உணவை உட்கொள்ளும் போது கால்களை மடக்கி, தரையில் அமர்ந்து உட்கொள்வதால், உணவுகள் முறையாக இரைப்பையை அடைந்து சரியாக செரிமானமாகும்

உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், உணவை உட்கொள்ளும் போது, சிறிய அளவிலான தட்டைப் பயன்படுத்துங்கள். இதனால் எவ்வளவு உணவு உட்கொள்கிறோம் என்பது நன்கு தெரியும். இதைக் கொண்டு உண்ணும் உணவில் கட்டுப்பாட்டுடன் இருக்கலாம்.

உணவை உண்ணும் போது அவசர அவசரமாக சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். மாறாக மெதுவாக நன்கு மென்று விழுங்க வேண்டும். இதனால் உண்ணும் உணவுகள் எளிதில் செரிமானமாகிவிடும் மற்றும் உணவில் உள்ள அனைத்து சத்துக்களும் கிடைக்கும். அதை விட்டு வேகமாக சாப்பிட்டால், காற்றை சேர்த்து விழுங்கி, வாய்வுத் தொல்லையால் அவஸ்தைப்படக்கூடும்.

காலை உணவை எழுந்த ஒரு மணிநேரத்திற்குள்ளேயே சாப்பிட வேண்டும். ஒரு நாளில் நீண்ட நேரம் சாப்பிடாமல் இருப்பது இரவு நேரத்திற்கும்-காலை நேரத்திற்கும் இடையிலான வேளையில் தான். அதேப் போல் இரவு நேரத்தில் தூங்குவதற்கு 2 மணிநேரத்திற்கு முன்பே சாப்பிட்டு விட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *