ARULMIGU NARASIMMASWAMY TEMPLE NAMAKAL

Maingod:  arul migu narasimma swamy

Deities: 

ஸ்ரீஆஞ்சநேயர்

Location:

அருள்மிகு ஸ்ரீநரசிம்ம சுவாமி திருக்கோயில்,

நாமக்கல் – 637001,

தமிழ்நாடு,

இந்தியா.

Festivals:

    • தமிழ் வருடப் பிறப்பு (சித்திரை)
    • தெலுங்கு வருடப் பிறப்பு
    • வைகாசி விசாகம் (ஏப்ரல் –மே)
    • ஆடி-18 (ஆகஸ்டு)
    • ஆடி பூரம் – ஸ்ரீநாமகிரி தாயர் ஊஞ்சல் சேவை
    • ஆவணி பௌத்திர உற்சவம் (செப்டம்பர்)
    • ஸ்ரீ நரசிம்மர் ஜெயந்தி (செப்டெம்பர்)
    • ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி (செப்-அக்டோ)
    • புரட்டாசியின் அனைத்து சனிக்கிழமைகள் (செப்-அக்டோ)
    • நவராத்திரி உற்சவம் (அக்டோ)
    • விஜயதசமி
    • திருகார்த்திகை தீபம் (டிசம்பர்)
    • ஸ்ரீஅநுமன் ஜெயந்தி (மார்கழி மாதம் மூல நக்ஷத்ரம் அமாவாசை)
    • மார்கழி மாதம் முழுதும் சிறப்பு வழிபாடுகள்
    • வைகுண்ட ஏகாதசி (ஸ்ரீ அரங்கநாதருக்கு சிறப்பு வழிபாடுகள்)
    • அறுவடைத் திருநாள் (பொங்கல்- ஜனவரி)
    • வருட உற்சவம் (பங்குனி)

* ஹஸ்த நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. இது 15 நாட்கள் திருவிழாவாகும். மூன்றாம் நாள் திருத் தேர் உலா நடை பெறும்.

Workship timing:

அருள்மிகு ஸ்ரீநரசிம்ம சுவாமி சன்னதி

காலை 7.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை

மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை


namakkal_narasimmar&Anjaneyar_temple (6)

அருள்மிகு தாயார் சன்னதி

காலை 7.00 அருமணி முதல் பகல் 1.00 மணி வரை

மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை


அருள்மிகு ஸ்ரீஆஞ்சநேயர் சன்னதி

காலை 6.30 மணி முதல் பகல் 1.00 மணி வரை

மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை

namakkal_narasimmar&Anjaneyar_temple (23)

History:

அன்னையை வணங்கிய ஸ்ரீஆஞ்சநேயர், தான் நீராடித் திரும்பும் வரை, தனக்குக் கிடைக்கப்பெற்ற சாலகிராமத்தை அவரது கரங்களில் வைத்திருக்குபடி வேண்டினார். அதற்கு அன்னை, குறித்த நேரத்தில் ஸ்ரீஆஞ்சநேயர் திரும்பி வராவிடில், சாலகிராமத்தை நிலத்தில் வைத்துவிடுவேன் என்ற நிபந்தனை விதித்தார். நிபந்தனைக்கு உட்பட்ட ஸ்ரீஆஞ்சநேயர், நீராடச் சென்றார். ஆனால், குறித்த நேரத்தில் வர இயலவில்லை. நிபந்தனையின்படி அன்னை, சாலகிராமத்தை நிலத்தில் வைத்துவிட்டார். திரும்பி வந்த ஸ்ரீஆஞ்சநேயர் எவ்வளவு முயன்றும் விஷ்ணு சாலகிராமத்தை அசைக்க முடியவில்லை. அந்த சாலகிராமம் ஒரு மலையாக உருவெடுத்தது. பகவான் நரசிம்மர் அவர்கள் முன் தோன்றி தரிசனம் அளித்தார். அன்னையின் தவத்திற்குப் பலன் கிடைத்துவிட்டது. பகவான் அன்னையோடு ஸ்ரீலக்ஷ்மிநரசிம்மராக அவ்விடமே அருள் தருகிறார். அன்றிலிருந்து, ஸ்ரீஆஞ்சநேயரும் உடன் நிலைத்து அருளைப் பொழிந்த வண்ணம் உள்ளார்.

ஸ்ரீவைகுண்டத்தின் வாயிற்காவலர்களான ஜெயன், விஜயன் ஆகிய இருவரும் முனிவர்கள் சாபத்தினால் அரக்கர்களாகப் பிறந்து, ஸ்ரீ மஹா விஷ்ணுவினால் அழிக்கப்பட்டு, மீண்டும் வைகுண்டத்தை அடந்தனர். அவ்வாறே, க்ருத யுகத்தில் ஜெயன் விஜயன் இருவரும் இரண்யாட்சன், இரண்யகசிபு என்ற அரக்க சகோதரர்களாகப் பிறந்தனர். இளையவனான இரண்யாட்சன், ஸ்ரீபூமி தேவியை எடுத்துச் சென்று சமுத்திரத்தின் அடியில் மறைத்து வைத்தான். ஸ்ரீ மஹாவிஷ்ணு வராஹ அவதாரம் எடுத்து, இரண்யாட்சனை வதைத்து, ஸ்ரீபூமிதேவியைக் காப்பாற்றினார்.

namakkal_narasimmar&Anjaneyar_temple (8)

இரண்யகசிபு தனது மனதை ஒருநிலைப்படுத்தி பல வருடங்கள் தவம் செய்தான். பரமபிதா பிரம்மதேவரை மகிழ்வித்துப் பல வரங்களைப் பெற்றான். மேலும், மானிடனாலோ அல்லது விலங்காலோ, பூமியிலோ அல்லது ஆகாயத்திலோ, வீட்டிற்கு உள்ளேயோ அல்லது வெளியிலோ, பகலிலோ அல்லது இரவிலோ, எந்த ஆயுதங்களாலோ தனக்கு இறப்பு ஏற்படக்கூடாது என்ற வரம் பெற்றான்.

இரணியன் தான் பெற்ற வரங்களின் சக்தியால் ரிஷிகளுக்கும், தேவர்களுக்கும் துன்பம் செய்தான். தன்னைத் தவிற வேறு தெய்வம் இல்லை என்றும், ‘இரண்யாய நம’ என்று தன்னை மட்டும் வணங்க வேண்டும் என்றும் கட்டளையிட்டான். இராட்க்ஷசன் மீது கொண்ட பயத்தால் யாகங்களும், தேவ பூஜைகளும் நடக்காமல் போயின. இதனால் கவலை கொண்ட தேவர்களும், ரிஷிகளும், பிரம்ம தேவருடன் சேர்ந்து ஸ்ரீ மஹாவிஷ்ணுவிடம் பிரார்த்தனை செய்தனர். இரண்யனின் கொடுமைகளிலிருந்து தங்களை விடுவிக்குமாறு வேண்டினர்..

ஸ்ரீமஹாவிஷ்ணுவும் இரணியனைக் கொன்று அனைவரையும் காப்பதாக வாக்களித்தார். இரணியனுக்கு ‘பிரஹலாதன்’ என்னும் ஒரு மகன் இருந்தான். அவன் ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் மீது அதீத பக்தி கொண்டிருந்தான். அதனால், ‘இரண்யாய நம’ என்று கூறாமல் ‘ஓம் நமோ நாராயணாய’ என்று கூறியே பிரார்த்தனை செய்தான். இரணியன் தன் மகனின் எண்ணத்தை மாற்றி, ஸ்ரீவிஷ்ணுவை மறக்கச் செய்து, தன் நாமத்தை ஜெபிக்க வைக்க வேண்டும் என்று நினைத்தான். அதற்காகப் பல கொடூர முறைகளைக் கையாண்டான். ஆனாலும் பிரஹலாதன் ‘ஓம் நமோ நாராயணாய’ என்றே ஜெபித்தான். தன்னோடு பிறரையும் நாராயணனை வணங்கச் செய்தான்.

இறுதியில், இரணியன் தன்னை வணங்காமல் நாராயணனை வணங்கும் பிரஹலாதனைக் கொன்றுவிட நினைத்தான். தனது படை வீரர்களிடம் யானை, நாகம், விஷம் முதலியவற்றால் சிறுவனைக் கொல்லக் கட்டளையிட்டான். ஆனால் சிறுவனின் விஷ்ணு பக்தி அவனை அனைத்துவிதமான ஆபத்துகளிலிருந்தும் காப்பாற்றியது.

இரணியன் பெருங்கோபத்துடன், ‘யார் உனது கடவுள்? எங்கே இருக்கிறான்? காட்டுவாயா?’ என்று பிரஹலாதனைப் பார்த்துக் கேட்டான். அதற்குப் பிரஹலாதன், ‘தந்தையே கேளுங்கள்! ஸ்ரீமஹாவிஷ்ணு ஒருவரே கடவுள். அவர் எங்கும் நிறைந்திருக்கிறார். அவர் நிலையானவர்- தங்களால் அவரை அழிக்க முடியாது. அவர் தங்களுள்ளும் இருக்கிறார், என்னுள்ளும் இருக்கிறார்’ என்று கடவுள் மீது கொண்ட நம்பிக்கையால் பெருமையோடும் துணிவோடும் பதில் கூறினான்.

namakkal_narasimmar&Anjaneyar_temple (4)

இரணியனின் கோபம் இன்னும் அதிகமானது. ஒரு தூணைக் காட்டி, ‘உனது கடவுள் இந்த தூணில் இருக்கிறானா?’ என்று கேட்டான். ‘நிச்சயமாக இருக்கிறார்’, என்று நம்பிக்கையோடு பிரஹலாதன் கூறினான். இதனைக் கேட்டவுடன் இரணியன் கோபத்துடன் அந்தத் தூணை உதைத்தான்.

உடனடியாக ஒரு பலத்த கர்ஜனையுடன் அந்தத் தூண் இரண்டாகப் பிளந்தது. பகவான் ஸ்ரீ நரசிம்மர் பெருங்கர்ஜனையோடு தூணிலிருந்து வெளி வந்தார். எதனோடும் ஒவ்வா மனிதனுமில்லாமல், விலங்குமில்லாமல், சிங்கத்தலையுடன் மனித உடல் கொண்ட கொடூர தோற்றத்தைக் கண்டு இரணியன் வியந்து போனான்.

அதனைத் தொடர்ந்து இரணியனுக்கும் பகவான் ஸ்ரீநரசிம்மருக்கும் இடையே யுத்தம் ஆரம்பித்தது. இறுதியில் ஸ்ரீநரசிம்மர் இரணியனை அவன் மாளிகையின் நுழைவாயிலுக்கு இழுத்துச் சென்று, தனது மடியில் அவனைக் கிடத்தி, தனது கூரிய நகங்களால் அவனது மார்பைக் கிழித்துக் கொன்றார். அப்போது சூரியன் பகலும் இன்றி இரவும் இன்றி அந்திசாயும் நேரத்தில் இருந்தது. இவ்வாறு, இரணியன் தன் வரத்தின்படியே ஸ்ரீ நரசிம்மரால் கொல்லப்பட்டான்.

பெரும் உக்கிரத்தோடு இருந்த ஸ்ரீநரசிம்மரை நெருங்கிட அனைத்து தேவர்களும், ஸ்ரீமஹாலக்ஷ்மி தாயாரும் அஞ்சினர். சிறுவனான பக்த பிரஹலாதன் இறைவனை வேண்டினான். ஸ்ரீநரசிம்மரும் கருணையோடு அவனை ஆசீர்வதித்துவிட்டு ஒரு சாலகிராமத்திற்குள் மறைந்துவிட்டார். ஸ்ரீநரசிம்மர் மறைந்த அந்த சாலகிராமத்தை பிரஹலாதன் தன் காலம் முழுதும் வணங்கிவந்தான்

திரேதா யுகத்தில், இராமாயண காலத்தில், ஸ்ரீஅநுமன் இமய மலையிலிருந்து எடுத்து வந்த சஞ்சீவி மூலிகையால் ஸ்ரீராமலக்ஷ்மணரையும் மற்றும் அனைவரையும் காப்பாற்றினார். அதன் தேவை முடிந்ததும், ஸ்ரீஅநுமான் அம்மலையை மீண்டும் எடுத்து வந்து இமாலயத்திலேயே வைத்தார். வான்வழியே திரும்பிவருகையில், ஸ்ரீநரசிம்மர் சென்று மறைந்த சாலகிராமத்தை ஸ்ரீஅநுமந்தர் எடுத்து வந்தார்.

இதற்கிடையில் ஆதவன் உதயமானார். சிறந்த சாது பிரம்மச்சாரியான ஸ்ரீஅநுமன் சந்தியாவந்தனம் செய்திட பூமியில் இறங்கினார். அந்த இடமே ஸ்ரீமஹாலக்ஷ்மி தபோவனம் என்றும், தாயார் இங்குள்ள கமலாலயம் என்னும் தீர்த்தத்தில் அவதரித்தார் என்றும் கூறப்படுகிறது. ஸ்ரீஅநுமந்தர் தனது காலை வந்தனங்களை இவ்விடமே செய்ய எண்ணி, தான் கொண்டு வந்த சாலகிராமத்தைக் கமலாலய தீர்த்தத்தின் அருகில் வைத்துவிட்டு சந்தியா வந்தனம் செய்தார்.

தனது கடமைகளை முடித்துவிட்டு வந்த ஸ்ரீஅநுமான் சாலகிராமத்தை அடுத்தார். ஆனால் அவரால் அடுக்க முடியவில்லை. இதனால் குழப்பமடைந்த ஸ்ரீஅநுமான் இறைவனை வேண்டினார். உடனே அந்த சாலகிராமம் ஒரு மலையாக உருவாகி, ‘ஓ அநுமந்தரே, நான் இவ்விடமே நிலைத்திருக்க எண்ணம் கொண்டுள்ளேன், உன்னால் நான் இங்கு கொண்டு வரப்பட்டேன். முதலில் இலங்கைக்குச் சென்று ஸ்ரீராமசந்திர மூர்த்திக்கு சேவை செய்வாய். என்னை வணங்கிட நினைத்தால், இராமாவதாரம் முடிந்த பிறகு, கலியுகத்தில் இங்கு வந்து என் முன் இருப்பாயாக’, என்ற குரல் ஒலித்தது. அவ்வாறே, நாமக்கல் ஸ்தலத்தில், மேற்குப்புறத்தில், வெளியில் ஸ்ரீநரசிம்ம சுவாமியின் நேரெதிரே நின்று வணங்குகிறார் ஸ்ரீஅநுமந்தர். .

இந்தப் புனித ஸ்தலத்தில் ஸ்ரீமஹாலக்ஷ்மி தாயாரின் வேண்டுதலுக்கினங்கி ஸ்ரீநரசிம்மர் அமைதி அடைந்து தாயாருக்கு வரங்கள் வழங்கியதாகக் கூறப்படுகிறது. அது முதலாகத் தாயார் ஸ்ரீநாமகிரி லக்ஷ்மி என்றும் பகவான் ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர் என்றும் நாமம் கொண்டு அருள் பொழிகின்றனர். ஸ்ரீநரசிம்ம சுவாமி குகைக்கோயிலில் பல அழகிய கலைப்படைப்புகளிடையே வீற்றிருக்கிறார்.
திருக்கோயிலின் மூலஸ்தானமும் அர்த்தமண்டபமும் குகையுள்ளே இருக்கின்றன. ஸ்ரீநரசிம்ம சுவாமி பிரதம ஸ்தானத்திலும், உடன் சனகர், சனாதனர், சூரியர், சந்திரர் சாமரம் வீச, சிவபெருமானும் பிரம்ம தேவரும் சுவாமியை வணங்கும் கோலத்திலும் நிலை பெற்றுள்ளனர்.

இதனால், நாமக்கல் திருமூர்த்தி ஸ்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. திருக்கோயிலின் அர்த்தமண்டப சுவற்றில் ஸ்ரீமஹா விஷ்ணுவின் அவதாரங்களின் அழகிய கலை வடிவங்களைக் காணமுடிகிறது. சூரியன், சந்திரனோடு சிவபெருமான், பிரம்ம தேவர், மார்க்கண்டேயர் மற்றும் பூமாதேவி ஆகியோர் ஸ்ரீவைகுண்ட நாராயணரோடு அருள் தருகின்றனர். ஸ்ரீஅபய நரசிம்மரும் எழுந்தருள்கிறார். அடுத்த சுவற்றில், ஸ்ரீ உக்ர நரசிம்மர் தனது கூரிய நகங்களால் இரணியனின் மார்பைக் கிழிக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. சுவற்றின் மறுபுறத்தில் ஸ்ரீவாமனமூர்த்தி மஹாபலி சக்கரவர்த்தியிடம் தானம் பெறுவதையும், தானம் தருவதைத் தடுக்கும் சுக்ராசாரியரைத் தண்டிக்கும் கருடாழ்வாரையும், ஜாம்பவானையும் காணமுடிகிறது.

அதே சுவற்றில் ஸ்ரீமஹா விஷ்ணு திரிவிக்ரமனராக விண்ணையும் மண்ணையும் அளந்தவராகக் காட்சி தருகிறார். அடுத்த சுவற்றில், நான்கு வேதங்களையும் பூமாதேவியையும் தாங்கியவராகக் காட்சி தருகிறார்.

இப்பாறையின் கிழக்குப்புறத்தில் உள்ள குகைக்கோயிலில் ஸ்ரீரங்கநாதர் கார்கோடக நாகர் மீது பள்ளி கொண்டு அருள் தருகிறார். மேலும் இக்கோயிலில் சங்கரநாராயணரையும் தரிசிக்க முடிகிறது. ஸ்ரீநரசிம்மர் கோயிலில் உள்ளது போன்ற வாமன அவதாரத்தையும் காண முடிகிறது. இக்கோயிலும் இதன் கலை வல்லமைகளைக்கூறும் சிற்பங்களும் மாநில அரசின் இந்து அறநிலையத்துறையின் கீழ் தொல்பொருள் ஆய்வுத்துறையால் பாதுகாக்கப் பட்டுவருகின்றன. ஆகம விதிப்படி நித்திய கால (பூஜை) வழிபாடுகளும் நடைபெற்று வருகின்றன.

பேரன்பு கொண்டு விளங்கும் ஸ்ரீ நாமகிரி தாயாரின் புகழ் பாரதத்தின் இமயம் முதல் குமரிவரை பரவியுள்ளது. நாமக்கல் வந்து தாயாரை வணங்கும் பக்தர்கள் தங்கள் குறைகளையும் அவரிடம் சமர்ப்பிக்கின்றனர். நோய்களிலிருந்து விடுதலை பெறவும், சந்தான பாக்கியம் வேண்டியும், பிற வேண்டுதல்களையும் வைக்கின்றனர். கனிந்த காலத்தில் ஸ்ரீ நாமகிரி அன்னையின் கருணையால் அவர்களின் குறைகள் நீங்கப்பெற்று மகிழ்வடைகின்றனர்.

தங்கள் வாழ்வை நிறைவாக்கிய அன்னைக்குக் காணிக்கைகள், சேலைகள், நகைகள் ஆகியவற்றை பக்தர்கள் சமர்ப்பிக்கின்றனர். ஸ்ரீநாமகிரி அம்மனுக்கு பத்து நாட்கள் ‘தசரா’ திருவிழா கொண்டாடப்படுகின்றது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாத ஹஸ்த நட்சத்திரத்தில் ஸ்ரீநரசிம்மர், ஸ்ரீரங்கநாதர், ஸ்ரீஅநுமான் ஆகியோருக்குத் தேர்த் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இவ்விழா 15 நாட்களுக்கு நடைபெறுகின்றது. மார்கழி மாதம் அமாவாசையன்று அனைத்து பக்தர்களாலும் ஸ்ரீஅநுமன் ஜெயந்தி சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றது.

ஸ்ரீநாமகிரி தாயாரின் கருணைக் கண்கள் கவலைகளைப் போக்கும் பேரழகு வாய்ந்தவை. ஸ்ரீ நாமகிரி தாயார், தாமரக் கண்கள் கொண்டவள் தாமரை முகத்தாள், தாமரைக் கரத்தாள். அவள் பாதங்களும் பத்மம். அவள் பிறந்ததும் தாமரையிலே, அமர்ந்திருப்பதும் தாமரையிலே, கைகளில் கொண்டிருப்பதும் தாமரையையே!

புராணங்களின் கூற்றுப்படி, இத்திருக்கோயில் தேவசிற்பி விஸ்வகர்மாவால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அகழ்வாராய்ச்சியின்படி, இக்கோயில் பல்லவ மன்னர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. எதனுள்ளும் கட்டுப்படாதவர் ஸ்ரீஅநுமந்தர் என்பதை உணர்த்துவதாய் இத்திருக்கோயிலில் ஸ்ரீஅநுமந்தர் மேலே உயர்ந்து, 18 அடிகளில் கட்டிடத்துள், கோபுரத்துள் கட்டுப்படாது நின்று அருளுகிறார்.

ஸ்ரீ நாமகிரி தாயாரின் அளவிட இயலா கருணையாலும், ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மர் குகைக்கோயிலின் சிறப்பினாலும் மற்றும் ஸ்ரீஅநுமந்தரின் தனிச்சிறப்பினாலும் நாமக்கல் ஒரு புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலமாக விளங்குகின்றது.

பக்தர்கள், சனி மற்றும் ராகு கிரகங்களின் பிடியிலிருந்து விடுபட வேண்டி ஸ்ரீ அநுமந்தருக்கு வடைமாலை அபிஷேகம் செய்கின்றனர்.

 

 

visit.tmpooja.com/info

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *